486 இலக்கண விளக்கம்-பொருளதிகாரம்

26.  கடிகை வெண்பா :

தேவரிடத்தும் அரசரிடத்தும் நிகழும் காரியம் கடிகை அளவில்
தோன்றி நடப்பதாக முப்பத்திரண்டு நேரிசை வெண்பாவால் கூறுவது. 

27.  கடைநிலை :

சான்றோர் சேணிடை வருதலால் பிறந்த வருத்தம்தீர, வாயில்
காக்கின்றவனுக்கு ‘என்வரவினைத் தலைவற்கு இசை’ எனக் கடைக்கண்
நின்று கூறுவது.

28.  கண்படை நிலை :

அரசரும் அரசரைப்போல்வாரும் அவைக்கண் நெடிது வைகியவழி
மருத்துவரும் அமைச்சரும் முதலியோர் அவர்க்குக் கண் துயில் கோடலைக்கருதிக் கூறுவது.

29.  கலம்பகம் :

ஒருபோகும் வெண்பாவும், கலித்துறையும், முதற்கவி உறுப்பாக
முற்கூறி, புயவகுப்பு, மதங்கு, அம்மானை, காலம், சம்பிரதம், கார்,
தவம்,குறம், மறம்,பாண், களி, சித்து, இரங்கல், கைக்கிளை, தூது, வண்டு,
தழை, ஊசல் என்னும் இப்பதினெட்டு உறுப்புக்களும் இயைய, மடக்கு
மருட்பா ஆசிரியப்பாகலிப்பா வஞ்சிப்பா ஆசிரிய விருத்தம் கலிவிருத்தம்
கலித்தாழிசை வஞ்சி விருத்தம் வஞ்சித்துறை வெண்டுறை என்னும் இவற்றால்
இடையேவெண்பா கலித்துறை விரவி, அந்தாதித் தொடையால்
முற்றுறக்கூறுங்கால் தேவர்க்குநூறும், அந்தணர்க்குத்
தொண்ணூற்றைந்தும்,அரசர்க்குத்தொண்ணூறும், வைசியர்க்கு
ஐம்பதும்,வேளாளருக்கு முப்பதுமாகப்பாடுவது.

30.  காஞ்சிமாலை :

மாற்றார் ஊர்ப்புறத்துக் காஞ்சிமாலை சூடி ஊன்றலைக் கூறுவது.