xx

இவ்வாறே தொகைநிலைத் தொடரில் பொருள் சிறந்து நிற்குமிடத்தைக் கொண்டு நேமிநாதத்தின் செல்வாக்கைக் காணலாம். தொல்காப்பியர்

  ‘முன்மொழி நிலையிலும் பின்மொழி நிலையிலும்
இருமொழியலும் ஒருங்குடனிலையலும்
அம்மொழி நிலையாது அன்மொழி நிலையிலும்
அந்நான் கென்ப பொருள்நிலை மரபே. (தொல். சொல். 419)
இக்கருத்தைத்தான் குணவீர பண்டிதர்  
   முன்மொழியும் பின்மொழியும் மூண்ட இருமொழியும்
அன்மொழியும் என்று இவற்றில்லாம்.... (நேமி. 63. 1,2)
என்று கூறிச் சென்றார். இந்த வரிகளே   
  ‘முன்மொழி, பின்மொழி, இருமொழி, அன்மொழியாய்ச்
சாற்றல்’ என்று சாமி காவிராயர்க்கு (சுவாமி. 67,2)
வழிகாட்டியாக அமைந்திருக்க வேண்டும். ஏனெனில்  
  முன்மொழி, பின்மொழி, பன்மொழி புறமொழி
என நான்கிடத்தும்...... (நன். 370)
என்ற நன்னூல் வரிகளைப் பார்த்தால் உண்மையைத் தெற்றெனப் புரிந்து கொள்ளலாம்.
அன்மொழி விளக்கத்திலும் நேமிநாதமே சுவாமிநாதத்திற்கு ஆதாரமாக அமைந்துள்ளதைக் காணலாம்.
  ஏனைத் தொகைச் சொற்கள் ஐந்தின் இறுதிக்கண்
ஆனபெயர் தோன்றின் அன்மொழியாம்
என்ற நேமிநாத வரிகளே (62. 1,2)
  சாற்று அன்மொழி ஐந்தொகை ஈற்று
அங்ஙன வேறு ஒருபேர்தனைக் காட்டும்

என்று சுவாமிநாதமாக மாறியுள்ளது (66 . 14)

இங்ஙனம் சொல்லளவில் மட்டும் நேமிநாதத்தில் சாமிகவிராயர் ஏன் ஈடுபாடு கொண்டார் என்பது மேலும் ஆராய்தற்குரியது.