பதிப்புரை

செந்தமிழ் மொழியின் சீர்மைகள் பலவற்றுள்ளும் முதன்மையாகக் குறிக்கத் தக்கது அதன் இலக்கண வரம்பின் ஏற்றமேயென்பது அனைவரும் ஒப்பமுடிந்தவோர் உண்மையாகும். அவ்விலக்கணந்தானும் உலகிடை வழங்கும் ஏனைய மொழிகளுள் எம்மொழியிலும் பயிலப் பெறாத பொருளிலக்கணத்தொடு பொருந்தி எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி என்னுமாற்றால் அமைந்துள்ள திறம் தமிழ் மொழியின் தன்னேரில்லாத் தனித் திறனாகும்.

ஐந்திலக்கணங்களும் ஒருங்கமையப்பெற்ற தொன்னூல்களுள் இஞ்ஞான்று நமக்குக் கிடைத்திருப்பது தொல்காப்பிய மொன்றுமே யாகும். இத்தொல்காப்பியத்துள், எழுத்துச் சொற்பொருள் என்னும் மூன்றதிகாரங்களில் ஐந்திலக்கணங்களும் கூறப்பட்டுள்ளன. யாப்பும், அணியும் பொருளில் அடக்கிக் கூறப்பட்டுள்ளன. எனவே, பிற்காலத்தில் யாப்புக்கும் அணிக்கும் தனித்தனி நூல்கள் சிலரால் இயற்றப்படலாயின. ஈதன்றித் தொல்காப்பியத்திற் கூறப்பட்டுள்ள இலக்கணத்துறைகள் ஐந்தும் நுண்மாண் நுழைபுல முடையார்க்கே தெள்ளிதின் விளங்குவனவாகவும் ஏனையோர்க்கு எளிதில் விளங்காதனவாகவும் உள்ளன. எனவே, அறிஞர் சிலர் தொல்காப்பியத்திற்கு வழி நூலாக ஐந்திலக்கண முழு நூல் இயற்றலாயினர். இவ்வகையில் தோன்றிய நூல்கள் முறையே, வீரசோழியம், தமிழ்நெறி விளக்கம், நன்னூல், இலக்கண விளக்கம், தொன்னூல், முத்துவீரியம் என்பனவாகும். முத்துவீரியத்திற்குப் பின்னர்த் தோன்றிய நூல்களும் சிலவுள.

இந் நூல்களுள் ‘தமிழ்நெறி விளக்கம்’ என்பது முழுமையாகக் கிடைத்திலது. நன்னூல் கிடைத்துள்ளதில் எழுத்தும் சொல்லும் இடம் பெற்றுள்ளனவன்றி ஏனைய மூன்றும் இடம் பெற்றில. எஞ்சிய ஐந்திலக்கண முழுநூல்களுள் வீரசோழியம், இலக்கண விளக்கம், தொன்னூல் என்னும் மூன்றும் முத்து வீரியத்திற்கு முற்பட்டனவாகும். இந் நூல்களிருப்பவும் ‘முத்துவீரியம்’ இயற்றப்பட்டதற்குக் காரணம் காலப்போக்கில் இலக்கியங்களில் தோன்றிய இலக்கண விகற்பங்கள் சிலவற்றை இயம்ப