வேண்டு மென்னும் ஆர்வமும், இலக்கண விதிகள் சிலவற்றிற்கு மேலும் விளக்கந் தரல் இன்றியமையாதது என்னும் உணர்ச்சியின் தூண்டுதலுமே யாகும்.

இவ்வாற்றான் கி.பி.19ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த உறையூர் முத்துவீரப்ப உபாத்தியாயர் என்பவரால் இயற்றப்பட்ட நூலே முத்துவீரியம் ஆகும். தொல்காப்பியரால் இயற்றப்பட்ட இலக்கணம் ‘தொல்காப்பியம்’ என வழங்கப்பெறுவதுபோல் முத்துவீரப்பரால் இயற்றப்பட்ட நூல் முத்துவீரியம் எனப்பெறுகின்றது.

தாம் இயற்றிய நூலின் இன்றியமையாமை, மக்களுக்குப் புலப்படும் வகையில், எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி என்னும் இலக்கணத்துறை ஐந்தனுள்ளும் புதுமைக் கருத்துக்கள் சிலவற்றைப் பொருத்தமுற இந்நூலாசிரியர் புகன்றுள்ள திறம் போற்றற்குரிய தொன்றாகும். தொல்காப்பியத்தின் வழி நூலாகத் தோன்றிய அனைத்திலக்கண நூல்களும் தொல்காப்பிய உரையாசிரியர்கள் பலருடைய கருத்துக்களைத் தழுவியும், மாறுபட்டும் அமைந்தனவாகும். அவ்வகையில் இம் முத்துவீரியமும் தொல்காப்பிய நூற்பாக்கள் சிலவற்றிற்கு உரை விளக்கம் போன்றமைந்துள்ளது. நன்னூலும் அங்ஙனமமைந்ததொரு நூலேயாகும். பலவிடங்களில் நன்னூலார் கருத்துக்களை முத்துவீரிய நூலாசிரியர் ஏற்றுப் போற்றியிருப்பது நன்னூலின் பெருமையை விளக்குவதாகும்.

சொற்பொருட் சுவை நலந்துய்த்து மகிழும் விழுப்பண்பாளர் இதனாற் பயன் யாதெனும் வினாவை யெழுப்பாமல் சுவையே பயனாகக் கருதியமைவர்.

‘‘நுண்ணுணர்வி னாரொடு கூடி நுகர்வுடைமை
விண்ணுலகே யொக்கும் விழைவிற்றால்’’

என்பது நூல்களுக்கும் பொருந்துவதாகும். இத்தகு தொன்னூல்களுட் சில போற்றுவாரின்மையால் இறந்தொழிந்தன வெனுங் குறிப்பினைச் சிலப்பதிகார அடியார்க்கு நல்லாருரையிற் காணுங்கால் தமிழார்வலர் நெஞ்சந்துணுக்குறுதல் இயல்பாகும். எனவே, இது போழ்து எஞ்சியுள்ள தொன்னூல்களுட் சில இறந்தொழியா வண்ணம் அவற்றைப் பேணுதல் வேண்டு மென்னும் அவாவினால் உந்தப்பெற்று இதன் முன்னர், வீரசோழியம் என்னும் நூலைக் கழக வாயிலாக வெளியிட்டோம். இலக்கண விளக்கம் என்னும் நூல் வெளிவருந் தறுவாயிலுள்ளது. முத்துவீரியம் இப்பொழுது வெளிவருகின்றது.