இம் முத்துவீரிய நூலுக்கு உரையாசிரியரா யமைந்தவர் திருநெல்வேலி திருப்பாற் கடனாதன் கவிராயர் என்பார். இவர் தம்முரை பண்டை இலக்கண நூலுரையாசிரியர்களாகிய இளம்பூரணர், சேனாவரையர், நச்சினார்க்கினியர் ஆகியவர்களுரையை ஒருவாறொத்திருப்பினும் பொழிப்புரையாகச் சுருக்கமாக அமைந்துள்ளது. முன்னையோர் உரைகளுக்கெல்லாம் விளக்கக் குறிப்புத் தருவது போன்றே இவ்வுரைக்கும் விளக்கக் குறிப்புத் தருதல் நன்றாமென்று கருதினோம்.

எம் கழக வாயிலாக வெளிவந்துள்ள தொல்காப்பியச் சொல்லதிகாரம் இளம்பூரணருரை, கல்லாடருரை, நச்சினார்க் கினியருரை, தெய்வச்சிலையாருரை யாகியவற்றிற்குத் திருப்பனந்தாள் தமிழ்க் கல்லூரிப் பேராசிரியர் பண்டித வித்துவான் சைவப் புலவர் சித்தாந்த நன்மணி திரு. கு. சுந்தரமூர்த்தி, எம்.ஏ., அவர்கள் விளக்கக் குறிப்புரை எழுதியுதவி யுள்ளார்கள். அவ்விளக்கக் குறிப்புரைகள் புலவர் பெருமக்களின் பாராட்டைப் பெற்றுள்ளன. எனவே, இம்முத்துவீரிய நூலுக்கும் விளக்கக் குறிப்புரை வரைந்துதவுமாறு அவர்களைவேண்டினோம். அவர்களும் இசைந்து விளக்கக் குறிப்புரையுடன் மேற்கோட் செய்யுள்களில் பலவற்றிற்கு இடக் குறிப்பும் தந்துதவியுள்ளார்கள்.

மேலும், அவர்கள் இந்நூலுக்கு அரியதோர் ஆராய்ச்சி முன்னுரையும் வரைந்து அணி செய்துள்ளார்கள். அவ்வாராய்ச்சி யுரையின்கண் இம் முத்துவீரியத்தின் சிறப்பியல்புகளைத் தெளிவுற விளக்கியுள்ளார்கள். அல்லாமலும் அவ்வாராய்ச்சியுரை ஐந்திலக்கண நூல்கள் பற்றிய ஒரு திறனாய்வுக் கட்டுரை போன்று சுவைபட அமைந்துள்ள திறம் போற்றுதற்குரியதாகும்.

ஐந்திலக்கண நூல்கள் உள்ளன பிறவற்றிற்கும் இம் முத்துவீரியத்திற்கு மிடையே யமைந்த இயைபு வேறுபாடுகளை அடைவே எழுத்து முதல் அணியீறாக வுள்ள அதிகாரங்கள் ஐந்தினின்றும் எடுத்துக் காட்டுக்கள் தந்து விளக்கியுள்ள முறை இவர் தம் ஆழ்ந்தகன்ற கல்விப் பெருமைக்குச் சான்றாக அமைந்துள்ளது.

சங்க காலத்திற்குப் பிறகு புறப்பொருள் நூல்கள் படிப்படியே சுருங்கி, அகப்பொருள் நூல்களே பல்கிப் பெருகலாயினமைக்குக் காரணங் காட்டுவாராய்,

‘‘சங்ககால வாழ்வியலில் நாட்டையும் தன்னையும் காத்துக் கொள்ளும் பொறுப்புத் தனிமனிதன் ஒவ்வொரு