அறுவகையிலக்கணம் p11
கருதி உயர்வற்றவர்களை வானளாவப் புகழ்ந்தும், வரம்பு மீறிய காமச்சுவை நாறவும் பாடிப் பிழைப்பை நடத்திவந்த புலவர்களே பழிக்கப்பட்டனர். தமிழ்ப்புலவனின் மதிப்பு சமூகத்தில் குறைந்துவிட்டது,
ஒரு புலவன் மற்றொரு புலவனைக் கண்டால் இவன் எங்கே நமக்குப் போட்டியாக வந்துவிடுவானோ என அஞ்சினான். இவ்வச்சம் பகையாக உருக்கொண்டது. இப்போட்டி, அறிவுசார்ந்த புலமைப்போட்டியாக இல்லாமல் வயிற்றுப் பாட்டுப் பிரச்சினையாக இருந்ததால் பகைமை உணர்ச்சி ஆழங்காற்பட்டது. ஓர் அறிஞன் மற்றொருவனின் அறிவாற்றலை மதிக்காமல் வாய்ப்புக் கிடைத்தபோதெல்லாம் அவனை மட்டம்தட்டவே முனைந்தான். இது புலமைக் காய்ச்சல் எனவும் பெருமையாகக் கூறப்பட்டது. எப்படியோ ஒரு பணக்காரனின் அல்லது சில செல்வர்களின் தயவைச் சம்பாதித்து வாழும் ஒருசாரார் - தொழில்முறைக் கவிஞர் எனப் பெருமையாகச் சொல்வோமே - புலவர்களாகத் திரிந்தனர்.
இன்னொரு சாரார் வாழ்க்கைப் பிரச்சினைகள் இல்லாமலோ அல்லது அவற்றைப்பற்றிக் கவலைப்படாமலோ அமைதியாகத் தத்துவ ஆராய்ச்சியிலும் தோத்திரங்களிலும் இலக்கணக் கடாவிடைகளிலும் ஈடுபட்டிருந்தனர். இவர்களால் சமுதாயத்திற்குத் தீமைகள் ஏதுமில்லை எனினும் சாமானிய மானவர்களின் அன்றாட வாழ்க்கைக்கு இவர்களால் உடனடிப் பயன்களும் இருக்கவில்லை. இத்தகைய அறிஞர்கள் ஓரளவு சமுதாயத்தை விட்டு விலகியே நின்றனர் எனலாம்.
அந்நாளைய தமிழ்ப்புலவர்களிலே விசித்திரமான ஒரு மூன்றாம் பிரிவினரும் இருந்தனர். இவர்களைப் புலவர் இளங்குமரன் அவர்கள் ழுவடமொழியும் தமிழும் தனித்தனி மொழிகள் அல்ல, ஒருமொழி என்னும் மயக்க உணர்வுடன், வடமொழியே தமிழ்மொழி மூலம் என்னும் மாறுபட்ட உணர்வும் கொண்டவர்கள்ழு 1 என்பார்.

1.
இலக்கண வரலாறு - புலவர் இரா. இளங்குமரன். பக். 361