வளை உடைத்தனையது

307. பாலை
வளை உடைத்தனையது ஆகி, பலர் தொழ,
செவ் வாய் வானத்து ஐயெனத் தோன்றி,
இன்னாப் பிறந்தன்று, பிறையே; அன்னோ,
மறந்தனர்கொல்லோ தாமே-களிறு தன்
உயங்குநடை மடப்பிடி வருத்தம் நோனாது,
நிலை உயர் யாஅம் தொலையக் குத்தி,
வெண் நார் கொண்டு, கை சுவைத்து, அண்ணாந்து,
அழுங்கல் நெஞ்சமொடு முழங்கும்
அத்த நீள் இடை அழப் பிரிந்தோரே?

உரை

பிரிவிடைக் கடுஞ்சொற் சொல்லிய தோழிக்குக் கிழத்தி உரைத்தது.- கடம்பனூர்ச் சாண்டிலியன்