காந்தள் அம் கொழுமுகை

265. குறிஞ்சி
காந்தள்அம் கொழு முகை, காவல்செல்லாது,
வண்டு வாய் திறக்கும் பொழுதில், பண்டும்
தாம் அறி செம்மைச் சான்றோர்க் கண்ட
கடன் அறி மாக்கள் போல, இடன் விட்டு,
இதழ் தளை அவிழ்ந்த ஏகல் வெற்பன்
நன்னர் நெஞ்சத்தன்-தோழி!-நின் நிலை
யான் தனக்கு உரைத்தனென் ஆக,
தான் நாணினன், இஃது ஆகாவாறே.

உரை

வரையாது பிரிந்த இடத்து, 'அவர் பிரிந்த காரணம் நின்னை வரைந்து கோடல் காரணமாகத் தான்' எனத் தோழி தலைமகட்குக் கூறியது. - கருவூர்க் கதப்பிள்ளை