பொழுதும் எல்லின்று

161. குறிஞ்சி
பொழுதும் எல்லின்று; பெயலும் ஓவாது,
கழுது கண் பனிப்ப வீசும்; அதன்தலைப்
புலிப்பல் தாலிப் புதல்வன் புல்லி,
'அன்னா!' என்னும், அன்னையும்: அன்னோ!
என் மலைந்தனன்கொல் தானே-தன் மலை
ஆரம் நாறும் மார்பினன்
மாரி யானையின் வந்து நின்றனனே?

உரை

இரவுக்குறிக்கண் வந்த தலைமகனைக் காப்புமிகுதியான் எதிர்ப்படப் பெறாத தலைமகள், பிற்றைஞான்று தலைமகன் சிறைப்புறத்தானாக, தோழிக்குச் சொல்லுவாளாய்ச் சொல்லியது. - நக்கீரர்