வேப்பம்பூ

24. முல்லை
கருங் கால் வேம்பின் ஒண் பூ யாணர்
என்னை இன்றியும் கழிவதுகொல்லோ?
ஆற்று அயல் எழுந்த வெண் கோட்டு அதவத்து
எழு குளிறு மிதித்த ஒரு பழம் போலக்
குழைய, கொடியோர் நாவே,
காதலர் அகல, கல்லென்றவ்வே.

உரை

பருவங் கண்டு ஆற்றாளாகிய கிழத்தி உரைத்தது. - பரணர்

281. பாலை
வெண் மணற் பொதுளிய
பைங் கால் கருக்கின்
கொம்மைப் போந்தைக் குடுமி வெண் தோட்டு,
அத்த வேம்பின் அமலை வான் பூச்
சுரி ஆர் உளைத் தலை பொலியச் சூடி,
குன்று தலைமணந்த கானம்
சென்றனர்கொல்லோ-சேயிழை!-நமரே?

உரை

பிரிவிடை வேறுபட்டாளைக் கண்டு, தோழி வற்புறுப்பாட்குக் கிழத்தி உரைத்தது.- குடவாயிற் கீரத்தன்