எருமை

181. குறிஞ்சி
இது மற்று எவனோ-தோழி!-துனியிடை
இன்னர் என்னும் இன்னாக் கிளவி-
இரு மருப்பு எருமை ஈன்றணிக் காரான்
உழவன் யாத்த குழவியின் அகலாது,
பாஅல் பைம் பயிர் ஆரும் ஊரன்
திரு மனைப் பல் கடம் பூண்ட
பெரு முது பெண்டிரேம் ஆகிய நமக்கே?

உரை

தலைமகன் பரத்தையிற் பிரிந்தவழி ஆற்றாளாகிய தலைமகள் ஆற்றல் வேண்டித் தோழி இயற்பழித்தவழி, தலைமகள் இயற்பட மொழிந்தது. - கிள்ளிமங்கலங்கிழார்

279. முல்லை
திரிமருப்பு எருமை இருள் நிற மை ஆன்
வருமிடறு யாத்த பகுவாய்த் தெண் மணி,
புலம்பு கொள் யாமத்து, இயங்குதொறு இசைக்கும்
இது பொழுது ஆகவும் வாரார்கொல்லோ-
மழை கழூஉ மறந்த மா இருந் துறுகல்
துகள் சூழ் யானையின் பொலியத் தோன்றும்
இரும் பல் குன்றம் போகி,
திருந்து இறைப் பணைத் தோள் உள்ளாதோரே?

உரை

வற்புறுத்தும் தோழிக்குக் கிழத்தி உரைத்தது. - மதுரை மருதன் இளநாகனார்