குருவி

46. மருதம்
ஆம்பற் பூவின் சாம்பல் அன்ன
கூம்பிய சிறகர் மனை உறை குரீஇ
முன்றில் உணங்கல் மாந்தி, மன்றத்து
எருவின் நுண் தாது குடைவன ஆடி,
இல் இறைப் பள்ளித் தம் பிள்ளையொடு வதியும்
புன்கண் மாலையும், புலம்பும்,
இன்றுகொல்-தோழி!-அவர் சென்ற நாட்டே?

உரை

பிரிவிடை 'ஆற்றாள்' எனக் கவன்ற தோழிக்குக் கிழத்தி ஆற்றுவல் என்பதுபடச் சொல்லியது. - மாமிலாடன்.

72. குறிஞ்சி
பூ ஒத்து அலமரும் தகைய; ஏ ஒத்து
எல்லாரும் அறிய நோய் செய்தனவே-
தே மொழித் திரண்ட மென் தோள், மா மலைப்
பரீஇ வித்திய ஏனல்
குரீஇ ஓப்புவாள், பெரு மழைக் கண்ணே!

உரை

தலைமகன் தன் வேறுபாடு கண்டு வினாவிய பாங்கற்கு உரைத்தது - மள்ளனார்

85. மருதம்
யாரினும் இனியன்; பேர் அன்பினனே-
உள்ளூர்க் குரீஇத் துள்ளுநடைச் சேவல்
சூல் முதிர் பேடைக்கு ஈனில் இழைஇயர்,
தேம் பொதிக் கொண்ட தீம் கழைக் கரும்பின்
நாறா வெண் பூ கொழுதும்
யாணர் ஊரன் பாணன் வாயே.

உரை

வாயில் வேண்டிச் சென்ற பாணற்குத் தோழி சொல்லி, வாயில் மறுத்தது. - வடம வண்ணக்கன் தாமோதரன்