குறுந்தொகை
 
v
 
பதிப்பாளர் குறிப்பு
 

 
"உருவாய் அருவாய் உளதாய் இலதாய்
மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்
கருவாய் உயிராய் கதியாய் விதியாய்
குருவாய் வருவாய் அருள்வாய் குகனே"


 
தமிழின் தொன்மையான இலக்கிய வகைகளைத் தேடிச் செப்பனிட்டு அழகூட்டித் தமிழுலகிற்கு அளித்தவர் டாக்டர்.உ.வே. சாமிநாத ஐயரவர்கள். தமது இளமை முதல் தமிழின் மீது தீராத பற்றுக் கொண்டு தமிழிலக்கியங்களை ஆராய்ந்து தமிழ்ப் பணி செய்த ஐயரவர்கள் தமிழ்நூல்களைச் செம்மையுறப் பதிப்பிப்பதையே தம் வாழ்நாளின் குறிக்கோளாகக் கொண்டவர்.
 
பழம்பெரும் காவியங்களையும். சங்க இலக்கியங்களுள் பலவற்றையும் திருத்தமாக அழகுறப் பதிப்பித்த ஐயரவர்கள் பதிப்பாசிரியர்களுக்குள் தலைசிறந்து விளங்கினார், எட்டுத்தொகை நூல்களுள் இரண்டாவதாகக் கூறப்படும் " குறுந்தொகை " என்னும் நூலைப் பதிப்பிக்க ஆர்வம் கொண்ட ஐயரவர்கள் அதற்கான அரிய முயற்சியை மேற்கொண்டார். மற்ற நூல்களுக்கு விரிவான உரை எழுதாத ஐயரவர்கள் குறுந்தொகைக்கு விரிவான உரை எழுத உளம் கொண்டார், எனவே ஊக்கத்துடன் விரிவான முறையில் ஆராய்ந்து பல அரிய குறிப்புக்களைச் சேகரித்துக் கொண்டார்.
 
நச்சினார்க்கினியர், பேராசிரியர் ஆகிய இருபெரும் உரையாசிரியர்கள் குறுந்தொகைக்கு உரையெழுதியுள்ளனர் என்பது வேறுபல குறிப்புக்களிலிருந்து தெரிய வந்தாலும் அந்த உரைகள் ஒன்றும் கிடைக்கவில்லை. ஐயரவர்களுக்கு அக்குறை இருந்தாலும் ஐயரவர்கள் பதிப்பித்த குறுந்தொகையைக் கற்பவர்களுக்குக் குறை காண வாய்ப்பில்லை, இந்நூலைப் பதிப்பிக்கும்போது ஐயரவர்களுடைய பிராயம் 82.
 
இவர் தம் முதுமைப் பருவத்தில் செய்த உயர்ந்த பணிகளில் ஒன்றாகத் திகழ்கிறது குறுந்தொகைப் பதிப்பு. இதன் பதவுரை, விசேடவுரை, ஒப்புமைப்பகுதி முதலியவற்றுடன் விரிவான நூலாராய்ச்சியும் இந்நூலுக்கு அணி சேர்த்து அழகூட்டுகிறது.
 
தமிழ்த்தாத்தா என்று அன்புடன் அழைக்கப்படும் ஐயரவர்கள் பதிப்பித்து வெளியிட்டுள்ள தமிழ்ப் புத்தகங்கள்யாவும் அன்னாருடைய கல்விப் பெருக்கு, அயராத உழைப்பு, ஆராய்ச்சியின் திறம், உரைக் குறிப்பெழுதுவதில் உள்ள திறமை ஆகிய அரிய இயல்புகளை நமக்குத் தெளிவாக்குகின்றன, தமிழ்த்தாத்தா பதிப்பித்த நூல்களில் ஒன்றினைக் கற்கும்போது பல நூல்களைக் கற்ற பயனடைவது திண்ணம்.
 
குறுந்தொகை என்னும் இத்தொகைநூல் அகப்பொருள் பற்றிய ஆசிரியப் பாக்கள் 401 ஐயும் . ஒரு கடவுள் வாழ்த்துச் செய்யுளையும் கொண்டது. நான்கடிச் சிற்றெல்லையும் எட்டடிப் பெரெல்லையும் கொண்டது. குறுந்தொகைச் செய்யுட்களைப் பாடியவர்கள் இறுநூற்றைவர். இவர்களுள் பெண்பாலர்களும் உளர். இந்நூலில் அமைந்துள்ள நூலாராய்ச்சி என்னும் பகுதியில் பல செய்திகள் மிக விரிவாக உள்ளன. இக் குறுந்தொகையைத் தொகுத்த புலவர் பூரிக்கோ என்பவர். இந்நூலால் பழந்தமிழர் நாகரிகம். பண்பாடு. நம்பிக்கை. கலை , ஆட்சி, புலவர்கள், அரசாட்சி போன்ற பல அரிய செய்திகளை அறிந்துகொள்ள முடிகிறது.
 
தமிழன்பர்களின் வேண்டுகோளுக்கிணங்கி டாக்டர் உ.வே. சாமிநாதையர் நூல் நிலையம் இக்குறுந்தொகையைப் பதிப்பித்து வெளியிடுகிறது. இந்நூல் தமிழ்வளர்ச்சித் துறையின் அரிய தமிழ் நூல்களை வெளியிட நிதியுதவி வழங்கும் திட்டத்தின் கீழ் வெளி வருகிறது. தமிழ்வளர்ச்சித் துறையினருக்கு நூலகத்தின் சார்பாக நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.
 
இப்பதிப்புக்கு ஒப்பு நோக்குதல் முதலிய பணிகளைச் செய்த திரு. M.S. சேஷாத்ரி அவர்களுக்கும். திரு.S. சாய்ராம் அவர்களுக்கும் மற்றும் இந்நூலினை நல்லமுறையில் அச்சிட்டுக் கொடுத்த ஸ்ரீ விக்னேஷ் பிரிண்டர்ஸ் அச்சக உரிமையாளர்களுக்கும் மிக்க நன்றி.
 
2, அருண்டேல் கடற்கரைச்சாலை,
பெசன்ட் நகர்,
சென்னை - 90
இங்ஙனம்
M.S. கீதா சேஷாத்ரி
ஆராய்ச்சித் துறை,
டாக்டர் உ.வே. சாமிநாதையர்
நூல்நிலையம்

மேல் அடுத்த பக்கம்