முற்றுமுள்ள கையெழுத்துப் பிரதிகளில் ஒவ்வொரு தொகை நூலின் இறுதியிலும் தொகுத்தோர் பெயரும் தொகுப்பித்தோர் பெயரும் அடிகளின் சிற்றெல்லை பேரெல்லைகளும் பெரும்பாலும் வரையப் பெற்றிருக்கும்; இந்நூல் முற்றுமுள்ள பிரதி அகப்படாமையால் அவற்றுள் ஒன்றும் புலப்படவில்லை.

கிடைத்த பிரதிகளில் இரண்டாவது முதலிய 20-பாடல்களுக்கு மட்டுமே ஒவ்வொரு பாடலின் பின்னும் துறையும், இயற்றிய ஆசிரியரது பெயரும் அதற்கு இசை வகுத்தோர் பெயரும், அதற்குரிய பண்ணின் பெயரும் எழுதப்பெற்றிருந்தன; ஆனாலும் 13-ஆம் பாடலுக்கு இசை வகுத்தோர் பெயர் காணப்படவில்லை.

இரண்டாவது முதலிய பதினொன்றின்பண் பாலையாழென்றும், 13-ஆவது முதலிய நான்கன்பண் காந்தாரமென்றும் இருத்தலை உற்று நோக்கும்பொழுது இந்நூற்பாடல்கள் தேவாரங்கள் போலவே பண்டைக்காலத்திற் பண்முறையால் தொகுக்கப்பெற்று உரிய பண்களுடன் பாடப்பெற்று வந்தனவென்று தெரிகின்றது. "எழுத்துருவொக்கும், பகுதியின் வந்த பாடகர் பிழைப்பும்" (அடி. 11 - 2) என்னும் இந்நூல் உரைச்சிறப்புப்பாயிரப் பகுதியும் இக்கருத்தை வலியுறுத்தும். பிற்காலத்திற் பண்ணொடு பாடும் வழக்கம் இல்லாமற்போனமையின் அம்முறையை இப்போது சிறிதும் தெரிந்துகொள்ள இயலவில்லை.

திருவாவடுதுறையாதீனத்துப் பிரதியொன்றும், தருமபுரவாதீனத்திலிருந்து கிடைத்த "பாயிரும் பனிக்கடல்" என்னும் 5ஆம் பாடல்மட்டும் எழுதிய இரண்டு ஒற்றை ஏடுகளும், ஆழ்வார்திருநகரி ஸ்ரீ. தே. லக்ஷமணகவிராயரவர்கள் வீட்டுப் பிரதிகள் இரண்டும், ஸேதுஸம்ஸ்தான மகாவித்வான் பாஷா கவிசேகர ஸ்ரீ. மத். ரா. இராகவையங்காரவர்கள் அன்புடனுதவிய இரண்டு மூல ஒற்றையேடுகளுமே இந்நூற் பரிசோதனைக்குக் கருவியாக இருந்தன.

இவற்றுள், முதற்பிரதி முதலும் இறுதியுமின்றி மிகவும் சிதைந்து போயிருந்தமையால் பார்த்தவுடன் இன்னநூலென்று புலப்படவில்லை; பிரித்துப் பார்த்தபோது,

"வண்ணவண்டின் குரல் பண்ணைபோன்றனவே"

என்ற பகுதியைக் கண்டு, அஃது இலக்கணக்கொத்தில் மேற்கோளாக வந்திருத்தலை யறிந்து, இது பழைய நூலாக இருக்க வேண்டுமென்றுமட்டும் எண்ணினேன். பிறகு திருமுருகாற்றுப்படையை நச்சினார்க்கினியருரையுடன் ஆராய்ச்சி செய்து வருகையில்,

"அறுவேறு வகையி னஞ்சுவர மண்டி" (அடி, 58)