என்பதன் விசேடவுரையில், முருகக்கடவுளின் திருவவதார வரலாற்றைக் கூறி, 'இதனைப் பாயிரும் பனிக்கடலென்னும் பரிபாடற் பாட்டாலுணர்க' என்றிருந்ததையும், இப்புத்தகத்தில் அம்முதற்குறிப்புள்ள பாடல் அவ்வரலாற்றுடன் ஐந்தாவதாக இருந்ததையும் அறிந்து இச்சுவடி பரிபாடலென்றும், "நற்றிணை நல்ல குறுந்தொகை" என்னும் வெண்பாவால் இஃது எட்டுத்தொகையுள் ஐந்தாவதென்றும் தெளிந்து கொண்டேன். இந்தப் பிரதியில் முதற்பாட்டிறுதியின் உரை தொடங்கி 19-ஆம் பாடலின் 38-ஆம் அடியின் உரைவரையிலுள்ள பகுதிகள் மட்டுமே இருந்தன; நெடுநாள்வரையில் முதலிலிருந்த உரைக்குரிய பாடல் கிடைக்கவில்லை; பின்பு, "கட்டுரை வகையின்" (தொல். செய். சூ. 117) என்பதன் உரையில் இளம்பூரணவடிகள் மேற்கோளாகக் காட்டிய "ஆயிரம் விரித்த" என்னும் பாடலின் இறுதிக்கு இவ்வுரைப்பகுதி பொருளாயிருத்தலைக்கொண்டு அதுவே இந்நூலின் முதற்பாடலென்று நிச்சயிக்கப்பெற்றது.

ஆழ்வார் திருநகரிப் பிரதிகள் இரண்டிலும் 2-ஆவது முதல் 22-ஆவது இறுதியாகவுள்ள பாடல்கள் உரையுடன் இருந்தன; ஒன்று மற்றொன்றைப் பார்த்து எழுதப்பெற்றதாதலின் அவ்விரண்டிற்கும் வேறுபாடு சிறிதும் காணப்படவில்லை; ஆனாலும் ஏட்டின் தேய்வு, ஒடிவு, இராமபாணத்துளை முதலியவற்றால் ஒரு பிரதியிற் சிதைந்துபோன எழுத்துக்களுட் சில சில மற்றொரு பிரதியால் விளக்கமுற்றன; 22ஆம் பாடலின் பிற்பகுதியும் அதற்குரிய உரையின் முற்பகுதியும் உள்ள ஓரேடு இரண்டு பிரதிகளிலும் இல்லை. இக்குறையைத் தீர்த்துக் கொள்ளுதற்கு எவ்வளவோ இடங்களுக்குச் சென்று பலவருடங்களாகத் தேடியும் பிரதிகள் கிடைக்கவில்லை.

இந்நூல் உரைப் பிரதிகளில் பாடல்களுக்குத் தரவு முதலிய உறுப்புக்கள் வரையப்படவில்லை. தொல்காப்பியவுரையில் மேற்கோள்களாக வந்த பாடல்களுள்; "ஆயிரம் விரித்த", "வானாரெழிலி" என்பவற்றிற்கு மட்டும் இளம்பூரணவடிகள் முதலியோரால் உரிய இடங்களில் உறுப்புக்கள் வரையப்பெற்றிருந்தமையின் அவ்விரண்டு பாடல்கள் மட்டும் அங்ஙனமே பதிப்பிக்கப்பெற்றன.

உரைக்குரிய மூலத்தின் இடங்களை வருத்தமின்றி அறிந்து கொள்ளுதற்காகவே மூலங்கட்கு அடியெண்கள் ஒருவாறு வரையறை செய்து அமைக்கப்பெற்றன.