அகத்தியமாதலின்; எருத்தமென்பதனைத் தரவென்றொருசாராசிரியர் கூறவும் அகத்தியமுணர்ந்த ஒருசாராசிரியர் பாட்டிற்கு முகம் தரவாதலானும் எருத்தமென்பது கழுத்தின் புறத்திற்குப் பெயராதலானும், அவ்வுறுப்புத் தரவைச் சார்ந்து கிடக்கவேண்டும் என்பதானும், எல்லா நூலிற்கும் அகத்தியம் முந்து நூலாகலானும் அகத்தியனார் நோக்கத்தோடு ஐந்துறுப்பாக்கினாரென வுணர்க; அஃதாக; இதனுள், எண்விராயதென்னை யெனின், 'கொச்சக வகையினெண்ணொடு விராய், அடக்கிய லின்றி யடக்கவும் பெறுமே' - என்பதனால் விராயதறிக. 'காமங்கண்ணிய நிலைமைத் தாகும்' எனவே அறத்தினும் பொருளினும் வாராதெனக் கூறிய பரிபாடலை இச்செய்யுளுடையார் வாழ்த்தியலாகக் கூறியதென்னை யோவெனின், 'வாழ்த்தியல் வகையே நாற்பாற்கு முரித்தே' எனச் சிறப்புவிதி ஓதினமையான் நான்கு பாவினுள்ளும் பரிபாடல் வெண்பா யாப்பிற்றாதலாற் கடவுள் வாழ்த்தாகியும் வரப்பெறுமென்னும் முதனூலாசிரியர் நோக்கம்பற்றிச் சங்கத்தார் பரிபாடல் கூறிய வகையாற் கூறினாரெனவுணர்க. 'ஆயிரம் விரித்த வணங்குடை யருந்தலை' என்னும் பரிபாடற் றரவின்பின், 'எரிமலர் சினைஇய கண்ணை . . . . நாவ லந்தண ரருமறைப் பொருளே' என்பது எருத்தம். இதனை ஒருசாராசிரியர் ஆசிரிய மென்றுங் கூறுவர்."

"யாஅர்வாழ்வார் யாஅர்வாழ்வார்"
என்னும் பாடலின் குறிப்பு:

"இது, சங்கப்பாடலாகிய பரிபாடலுள், கடுவனிளவெயினனார் பாட்டாய் முதலே மூன்றாவதாய்ப் பெட்டனாகனாரிசை பண்ணுப் பாலையாழாய 'மாஅயோயே' என்னும் பரிபாடல்போல எருத்தமும் கொச்சகமுமின்றி வந்த பரிபாடல்."

"வேல்விழி யிணையென" என்னும் பாடலின் குறிப்பு:

"சங்கப் பரிபாடலுள், 'கார்மலி கதழ்பெயல் பூமலர்ந்தனவே என்னும் பதினாலாம் பாட்டின் நடையதாய் அமைந்தது."

"விழுமிய திருத்துறை" என்னும் பாடலின் குறிப்பு :

"இது, பரிபாடலுள், 'தொன்முறையியற்கையின்' என்னும் இரண்டாம் பாட்டினுறுப்புடை நடைத்தாய் வந்தது."

ஏட்டுப்பிரதிகள் தேடுகையிற்கிடைத்த சில குறிப்புக்களாலும், "கண்ணுதற் கடவுள்" என்னும் இந்நூல் உரைச் சிறப்புப் பாயிரத்தாலும், செந்தமிழ், 6, 7, 9, 10ஆம் தொகுதிகளில் பதிப்பிக்கப்பெற்றுள்ள திருக்குறட்பரிமேலழகருரை நுண்பொருண்மாலையாலும் இந்த உரை பரிமேலழகர் இயற்றியதென்று தெரியவந்தது.