சென்றேனும் கண்டேனும் திசை நோக்கியேனும் குடும்பத்துடன் வழிபடுமினென்று உலகத்தவரை நோக்கிக் கூறியிருக்கும் இவரது அன்புடைமையும், அக்குன்றத்தின் அடியுறைதலே தமக்கு வேண்டுமென்று இவர் முடித்திருத்தலும் அறிந்து இன்புறுதற்குரியன. இவர் பாண்டியர் குடியிற் பிறந்தவரென்பதை வழுதியாரென்ற பெயர் புலப்படுத்துகின்றது. இளம்பிராயத்திலேயே பேரறிவினராக வழுதியாரென்ற பெயர் புலப்படுத்துகின்றது. இளம்பிராயத்திலேயே பேரறிவினராக இருந்தது பற்றி இவர் இப்பெயர் பெற்றனரென்று தோற்றுகின்றது; இப் பாடலே இவரது பேரறிவிற்குப் போதிய சான்றாகும். புறநானூற்றுச் செய்யுட்களைப் பாடிய புலவர்களுள் கடலுண் மாய்ந்த இளம்பெருவழுதியென்று ஒருவர் உளர்; அவர் பாடிய "உண்டாலம்ம" என்னும் செய்யுளும் இப்பாட்டும் பரோபகாரச் செய்தி முதலிய கருத்துக்களில் ஒத்திருத்தலானும் பெயரொற்றுமையானும் அவரும் இவரும் ஒருவரென்றே கொள்ளுதல் முறையாகும். 'கடலுண் மாய்ந்த' என்னும் அடைமொழி, துஞ்சியபின்பு இவருக்கு அமைக்கப்பட்டதென்பது சொல்லாமலே விளங்கும். நற்றிணைப் புலவர் வரிசையிலும் பழைய இலக்கணவுரைகளின் உதாரணங்களுள்ளும் பெருவழுதி யென்னும் பெயர் காணப்படுகின்றது. ஆயினும், இளமையென்னும் அடைமொழியின்மையால், அப்பெயரையுடையார் வேறு, இவர் வேறென்று கொள்ளவேண்டும்.
3.
கடுவன் இளவெயினனார்:- இவர் செய்த பாடல்கள் 3, 4, 5; திருமாலையும் முருகக்கடவுளையும் வாழ்த்தியிருத்தலால் இவர் அவ்விருவரிடத்தும் அன்புடையவரென்று தெரிகிறது. மூன்றாம் நான்காம் பாடல்களில் திருமாலைத் துதித்திருக்கும் பகுதிகளும், அவருடைய நால்வகைவியூகம், வராக நரசிங்க வாமனாவதாரச் செயல்கள், அவர் அன்னமாகத் தோன்றிச்செய்த அரியசெயல்,
"வள்ளுரு ணேமியான் வாய்வைத்த வளைபோலத்
தெள்ளிதின் விளங்குஞ் சுரிநெற்றிக் காரியும்
ஒருகுழை யவன்மார்பி லொண்டார்போ லொளிமிகப்
பொருவறப் பொருந்திய செம்மறு வெள்ளையும்" (கலித். 104, 105)
"கடல் வளர் புரிவளை புரையு மேனி,
அடல்வெந் நாஞ்சிற் பனைக்கொடியோனு,
மண்ணுறு திருமணி புரையு மேனி,
விண்ணுயர் புட்கொடி விறல்வெய்யோனும்,
வலியொத் தீயே வாலி யோனைப்,
புகழொத் தீயே யிகழுந ரடுநனை" (புறநா. 56)
"மாயவனுந் தம்முனும் போலே மறிகடலும்,
கானலுஞ்சேர் வெண்மணலுங் காணாயோ" (திணைமா. 58)
என்பவற்றாலும் இதனையுணர்க, "புகர்வெள்ளை நாகர்தங்கோட்டம்" (சிலப். 9 : 10) என்பதனாற் பலதேவர்க்குத் திருக்கோயில் இருந்தமை தெரிகின்றது. சோலை மலையிற் பலதேவர் திருவுருவம் இக்காலத்திற் காணப்படவில்லை.
|