வேதத்தால் அவர் பாராட்டப்படும் வகை, யோகிகளாலே தியானிக்கப்படும் முறை, கருடனும், பனை, நாஞ்சில், யானை ஆகிய இவைகளும் அவருக்குக் கொடிகளாவுள்ளன வென்பது, ஆல் கடம்பு ஆற்றிடைக்குறை குன்றம் இவற்றில் அவர் வேறுவேறு பெயரோடு எழுந்தருளியிருத்தல், கருடனது பெருமை, அவனுக்குண்டாகிய செருக்கை அவர் அடக்கினமை, தத்துவத்தின் தோற்ற வொடுக்கங்கள் முதலியவற்றை விதந்து கூறியிருக்கும் பகுதிகளும் மிக்க இனிமை பயப்பன. முருகக்கடவுளுடைய திருவவதார வரலாறு, அவதரித்த அன்றே இந்திரன் முதலிய தேவர்களை வென்று அவர்கள் அளித்த மயில், கோழி முதலியவற்றை அவர் பெற்றமை, வேற்படையாற் கிரௌஞ்சத்தை உடைத்து வழியுண்டாக்கினமை, பிணிமுகமென்னும் யானையை ஊர்ந்துசென்று கடலிற் சூர்மாவைத்தடிந்தமை ஆகிய இவைகளும், வெறியாட்டுச் செயல் சிவபிரான் திரிபுர தகனஞ்செய்த சரிதம் ஆகிய இவைகளும் ஐந்தாம்பாட்டிற் கூறப்பெற்றுள்ளன. "எமக்கு வேண்டுவன நுகர்பொருளும் போகமுமல்ல; அருளும் அன்பும் அறனுமே" என்று வேண்டிக் கொண்டிருத்தல் இவருடைய பேரன்பைத் தெரிவிக்கின்றது. இவர்பெயர் ஒரு பிரதியிற் கடுவனிளவெயினாரென்றும் காணப்படுகிறது.

4. கரும்பிள்ளைப் பூதனார்:- இவர் வையைக்குரியதாகிய 10-ஆம் பாடலை இயற்றியவர். இப்பாடலிலுள்ள புதுநீர் விழாச் சிறப்புமிக்க இன்பமளிப்பது. நீர்விளையாட்டின் முறை இதனால் நன்கு அறியலாகும். இதில் வந்துள்ள உவமைகள் யாவும் சிறந்தவை. நெருக்கத்தால் மெல்லச்செல்லும் மாந்தர் நடைக்கு வாச்சியத்தின் விளம்பித நடையை உவமை கூறியிருத்தலின் இவரது இசைப்பயிற்சியும், வையையின் பேருதவிக்குப் பாண்டியன் கொடையை உவமை கூறியிருத்தலின் அவனிடம் இவருக்கு இருந்த அன்பும் வெளியாகின்றன.

5. கீரந்தையார்:- இரண்டாம் பாடலாகிய திருமால் வாழ்த்து இவரால் இயற்றப்பெற்றது. இதில் ஐம்பூத ஊழிகள், நெய்தல் முதலிய பேரெண்கள், திருமாலின் வியாபகம், அவர் பல தேவராகவும் கண்ணபிரானாகவும் பூவராக மூர்த்தியாகவும் ஆனமை, தேவர்களுக்கு இவர் அமுதளித்தது, வேள்வியில் அவருக்குள்ள சம்பந்தம் ஆகிய இவைகளும் பிறவும் கூறப்பெற்றுள்ளன. அவருடைய திருமேனி முதலியவற்றிற்கு இவ்வாசிரியர் கூறிய உவமை, அவரது திருமார்பைப் பாராட்டியிருத்தல் முதலியவைகள் வியக்கற்பாலன.