திருவள்ளுவமாலையிலுள்ள
"தப்பா முதற்பாவால்" என்னும் செய்யுளை இயற்றியவரும்
இவரேயென்பர். சிலப்பதிகாரம், 23-ஆம் காதை, 42-ஆம்
அடியில் கீரந்தையென்ற பெயரொன்று வந்துள்ளது. அப்பெயரையுடையாரும்
இவரும் ஒருவரோ வேறோ தெரியவில்லை.
6.
குன்றம்பூதனார்:- இவர் முருகக்கடவுள்பால் அன்புடையவர்; அவருக்குரிய
9, 18-ஆம் பாடல்களை இயற்றியவர். 9-ஆவதில், "நான்மறை
விரித்து" என்பது முதலியவற்றாற் பாராட்டி
யிருக்கும் தமிழ்வழக்கானது தமிழ்மொழியின்கண்
இவருக்குள்ள பேரன்பைப் புலப்படுத்தும். 18-ஆவது செய்யுளால்
சூரனுடைய மாமரச் செய்தியும் திருப்பரங்குன்றத்துள்ள
கோயிலின் பக்கத்தே சித்திரவம்பலம் உண்டென்பதும்
தெரியவருகின்றன. குறிஞ்சித் திணைக்குரிய முதல்,
கரு, உரியென்ற முப்பொருள்களையும் செவ்வனே அமைத்து
நயமுறக் கூறியிருத்தலை உற்று நோக்கும்பொழுது, இவர்
அத்திணையைப் பாடுதலில் வல்லவரென்று தெரிகின்றது.
1திருப்பரங்குன்றத்துள்ள சோலை சுனை அருவி
காந்தள் தினை மயில் முதலியவற்றை வருணித்து, அக்குன்றம்
இமயத்தையும் முருகக்கடவுளின் ஊர்தியாகிய யானையையும்
ஒக்குமென்று இவர் கூறியிருப்பது பாராட்டற்பாலது.
குன்றத்தை இங்ஙனம் அழகுறப் பாடியிருத்தலால் இவர்
இப்பெயர் பெற்றனர் போலும்.
7. கேசவனார்:-
இவர் முருகக்கடவுளுக்குரியதாகிய 14-ஆம் பாடலை இயற்றியவர்;
இப்பாடலில் திருப்பரங்குன்றத்துள்ள சுனை முதலியவற்றையும்
கார்காலத்தையும் வருணித்திருத்தலும் அங்கங்கே
கூறிய உவமைகளும் முருகக்கடவுளை முன்னிலையாக்கித் துதித்திருக்கும்
அருமையும் மிக்க இன்பம் பயக்கும். அவரை அடுத்தடுத்து
வழிபடுவதன் பயன் மேன்மேலும் அவரை வழிபடுவதாகவே
ஆகல்வேண்டுமென்று இதனிறுதியில் வேண்டுதல் அவர்பால்
இவருக்குள்ள ஒப்புயர்வற்ற அன்பைப் புலப்படுத்துகின்றது.
இசைச்செய்திகளை இவர் பலபடப் பாராட்டியிருக்கிறார்.
இப்பாடலுக்கு இசை வகுத்தவரும் இவரே.
8.
நப்பண்ணனார்:-
முருகக்கடவுளுக்குரியதாகிய 19-ஆம் பாடல் இவரால்
இயற்றப்பெற்றது. திருப்பரங்குன்றத்தில் நிகழும்
வள்ளியம்மையின் திருமணவிழாச் செய்தியும்,
முருகக் கடவுளைத் தரிசிக்க விரும்பி மதுரையிலுள்ளோர்
1 இது
குன்றமெனவும், குன்றெனவும் இந்நூலிலும் பிற நூல்களிலும்
வழங்குகின்றது.
|