நடந்தும் தத்தமக்குரிய ஊர்திகளில் ஏறியும் செல்லுதலும். அவர்களுடைய நெருக்கத்தால் தோன்றும் வழியின் காட்சியும், பாண்டியன் உரிமைமகளிரோடும் மந்திரிமார் முதலியவர்களோடும் வந்து அம்மலையின் மீதேறித் திருக்கோயிலை வலம்வருதலும், தரிசிக்க வந்தவர்கள் அம்மலையில் நிகழ்த்தும் பலவகைச் செய்திகளும், ஆண்டுள்ள மண்டபத்து எழுதப்பெற்ற பழஞ்செய்திகளைப் புலப்படுத்தும் சித்திரவகைகளும், பலவகை மலர்களின் தோற்றமும், கொடியேற்றிய யானையை அலங்கரித்துப் பூசித்தலும், கன்னியரும் மணந்தமகளிரும் பயன்களைக்கருதி அந்த யானையின் கவளமிச்சிலை யுண்ணுதலும், முருகக்கடவுள் கடம்ப மரத்தின் அடியில் எழுந்தருளியிருத்தலும், பிறவும் இப்பாடலிற் கூறப்பெற்றுள்ளன. இதில் வந்துள்ள உவமைகள் மிக்க இன்பம் பயப்பவை. இவரது இயற்பெயர் பண்ணனாரென்பது; 'ந' என்பது சிறப்புப்பொருளைத் தருவதோர் இடைச்சொல்.

9. நல்லச்சுதனார்:- முருகக்கடவுளுக்குரியதான 21-ஆம் பாடலை இயற்றியவர் இவர். இப்பாட்டில் முருகக்கடவுள் ஊரும் யானை, அவர் தொடும் அடையற்செருப்பு, அவரது வேற்படை, அவர் அணிந்த கடப்பமாலை, திருப்பரங்குன்றம், அதை வழிபடும் மகளிருடைய பலவகைச் செயல்கள், அங்கே ஆடும் மயிலின் காட்சி, மகளிரும் மைந்தரும் சுனையில் நிகழ்த்தும் நீர்விளையாட்டு, பலவகை மணத்துடன் அங்கே தவழும் தென்றலின் இயல்பு, கேள்வர் உருட்டும் துடிச்சீர்க்குஇசையக் குன்றத்து மகளிராடல் ஆகிய இவைகளும், பிறவும் கூறப் பெற்றுள்ளன. திருப்பரங்குன்றம் யானையாக உருவகம் செய்யப்பெற்றிருக்கின்றது. முருகக்கடவுளுடைய அடியின் கீழும் திருப்பரங்குன்றத்தின் கீழும் உறைதல் தமக்கு இயையவேண்டுமென்று இவர் வேண்டுதல் அவர்பால் இவருக்குள்ள அன்பின் மிகுதியைக் காட்டுகின்றது. இந்நூலில் 16, 17, 18, 20-ஆம் பாடல்களுக்கு இசைவகுத்தவரும் இவரே. இவற்றால் இயலிசைகளில் இவர் வல்லுநரென்று தெரிகின்றது.

10. நல்லழிசியார்:- இவர் வையைக்குரியதாகிய 16-ஆம் பாடலையும் முருகக்கடவுளுக்குரியதான 17-ஆம் பாடலையும் இயற்றியவர். பதினாறாவதில் வையையினது கரை அதன் துறை அதன் கரைச்சோலை முதலியவற்றின் சிறப்பியல்பும், அதன் நீர்ப்பெருக்கும், அதில் நிகழ்ந்த நீர்விளையாட்டுச் செய்தியும், பதினேழாவதில் திருப்பரங்குன்றத்தில் முருகக்கடவுள் எழுந்தருளிய கடம்பமரத்தை