இசைவகுத்தோர் வரலாறு

1. கண்ணகனார் :- இவர் 21-ஆம் பாடலுக்கு இசைவகுத்தவர்; புறநானூற்றிலுள்ள 218-ஆம் செய்யுள் இயற்றியவரும் நற்றிணையில் 79-ஆம் செய்யுளியற்றியவரும் இவரே. இதனால், இவர் இயற்றமிழிலும் வல்லுநரென்று தெரிகின்றது.

2. கண்ணனாகனார்:- இவர் 5-ஆம் பாடலுக்கு இசைவகுத்தவர்.

3. கேசவனார்:- 14-ஆம் பாடலுக்கு இசை வகுத்தவர்; பிறவரலாற்றைப் பாடினோர் வரிசையிற் காண்க.

4. நந்நாகனார்:- இவர் 12-ஆம் பாடலுக்கு இசை வகுத்தவர். நப்பண்ணனாரென்பதிற்போல 'ந' என்பது சிறப்புப் பொருளையுணர்த்தும்.

5. நல்லச்சுதனார்:- இவர் 16, 17, 18, 20-ஆம் பாடல்களுக்கு இசைவகுத்தவர்; பிறவரலாற்றைப் பாடினோர் வரிசையிற் காண்க.

6. நன்னாகனார்:- இவர் 2-ஆம் பாட்டிற்கு இசைவகுத்தவர். புறநானூற்று ஆசிரியர்களுள் புறத்திணை நன்னாகனாரென ஒருவர் உளர்; அவரும் இவரும் ஒருவரோ வேறோ தெரியவில்லை.

7. நாகனார்:- இவர் 11-ஆம் பாடலுக்கு இசை வகுத்தவர்.

8. பித்தாமத்தர்:- இவர் 7-ஆம் பாடலுக்கு இசைவகுத்தவர். இப்பெயர்
பித்தாமக்கரென்றும் காணப்படுகின்றது.

9. பெட்டனாகனார்:- 3, 4-ஆம் பாடலுக்கு இசைவகுத்தவர் இவர்.

10. மருத்துவனல்லச்சுதனார்:- இவர் 6, 8, 9, 10, 15, 19-ஆம் பாடல்களுக்கு இசை வகுத்தவர். 'மருத்துவன்' என்ற சிறப்புப் பெயர் இவர் மருத்துவநூலிலும் வல்லவரென்பதைக் காட்டுகின்றது.