இனி, இப் பாட்டின்கண் 'எம்பேரூர் வஞ்சியும் கோழியும் போலக் கோழியின் துயில் எழாது' என்புழி, மதுரைக்கு வஞ்சி நகரமும் உறையூரும் "வேறுபட வந்த உவமத்தோற்றம்" எனப்படும். இதன்கண் நல்லிசைப்புலவன் உணர்த்தக் கருதிய பொருள், மதுரைமாநகரின்கண் அறிவுசான்ற வேதியர் நிரம்பியுள்ளனர். ஆதலால் அந் நகரம் அறிவுச் சிறப்புப் பெரிதும் உடையதென்பதே. இக் கருத்தினை இவ் வேறுபாடு உவமத்தோற்றத்தாலே கூறுங்கால் அக் கருத்துப் பின்னும் எத்துணை அழகாய் ஓதுவோருளத்தே பதிகின்றது உணர்மின். இனி இப்பாடலிலே பயின்றுவரும் செஞ்சொல் இன்பந்தான் எத்துணைப் பெரிது. "மாயோன் கொப்பூழ் மலர்ந்த தாமரை, "அண்ணல் கோயில்." "தண்டமிழ்க் குடிகள்," "தாதுண்பறவை," "பரிசில் வாழ்நர்," "பூவினுட் பிறந்தோன் நாவினுட் பிறந்த நான்மறைக்கேள்வி," "ஏமவின்றுயில்," "வஞ்சியும் கோழியும்," என இப் புலவர் பெருமான் வீறுடைய சொற்களாற் றொடுக்கும் தொடையழகு தரும் தமிழின்பந்தான் எத்துணைப் பெரிது காண்மின்!

இனி, வையையின்கண் பெருகிவரும் வெள்ளம் கட்டுக்கடங்காது அணைகளை உடைத்துப் போயிற்றாக, அதற்கு உவமை தேர்ந்து கூறும் புலவர்,

"வளிவாங்கு சினைய மாமரம் வேர்கீண்டு
உயர்ந்துழி உள்ளன பயம்பிடைப் பரப்பி
உழவர் களிதூங்க முழவு பணைமுரல
ஆடல் அறியா அரிவை போலவும்
ஊடல் அறியா உவகையள் போலவும்
வேண்டுவழி நடந்து தாங்குதடை பொருது."

ஆடலியல்பு அறியாத கூத்தியொருத்தி கூத்திலக்கணத்திலமையாது தான் வேண்டிய இடங்களிலே நடந்தும், ஊடலின் இயல்பறியாத பேதையொருத்தி, காமக்களிமயக்கத்தாலே தனக்குப் பாதுகாவலாகிய கணவன் கருத்திற்கேற்ப அமைந்து ஒழுகாமல் அவனைக் கடந்து நீங்குமாறுபோலப் போயிற்று என உவமை எடுத்துக் கூறுதலும், பிறிதோரிடத்தே,

வெள்ளத்திற் கஞ்சாதாராய் விலாப்புடை மருங்குல் விசிப்பவுண்டு அவ் வெள்ளத்தினூடே தந்தொழில் கருதிச் செல்லும் உழவர்,

"தினைவளர் வாளையின் சிளையொடு கெழீஇப்
பழன உழவர் பாய்புன" லில்

சென்றனர் என்றலும், மற்றோரிடத்தே,