இதழகத் தனைய தெருவம் இதழகத்து
அரும்பொகுட் டனைத்தே அண்ணல் கோயில்
தாதின் அனையர் தண்தமிழ்க் குடிகள்
தாதுண் பறவை அனையர் பரிசில் வாழ்நர்
பூவினுட் பிறந்தோன் நாவினுட் பிறந்த
நான்மறைக் கேள்வி நவில்குரல் எடுப்ப
ஏம இன்றுயில் எழுதல் அல்லதை
வாழிய வஞ்சியும் கோழியும் போலக்
கோழியின் எழாதெம் பேரூர் துயிலே"
என்பதாம்.
உவமை கூறுங்கால் பொருளுக்கும் உவமைக்கும் தொழில்
பயன்
வடிவம் வண்ணம் என்னும் நான்கனுள் ஒன்றாதல் பலவாதல் பொதுத்
தன்மையாதல் தேர்ந்தே கூறப்படும். மேலும் அவ் வுவமைதாம்,
பொருளினும் உயர்ந்ததாதலும் வேண்டும். மேலும் உவமை, சிறப்பும்
நலனும் காதலும் வலியும் என்னும் நான்கனுள் ஒன்றாதல் பலவாதல்
நிலைக்களனாகத் தோன்றுதல் வேண்டும் என்ப இப் பரிபாடலின்கண்
எடுத்துக் கூறிய மாயோன் கொப்பூழ் மலர்ந்த தெய்வத்தாமரை சிறப்பும்
நலமும் நிலைக்களனாகப் பண்புபற்றிப் பிறந்த உவமையாம். உவமை
"உயர்ந்ததன் மேற்றே" என்ற விதிப்படி நோக்குங்கால் இதனினும்
உயர்ந்ததோருவமை தேர்தல் அரிதேயாகும். பொதுக்காட்சிக்குத்
திருமாலின் திருவுந்தித் தெய்வத் தாமரையை ஒத்துத் திகழும் அம்
மதுரைமாநகரத்தே நிரலாக அமைந்துள்ள தெருக்கள், அத் தாமரையின்
அகவிதழ்கள் போன்றன என்றும், அத் தெருக்கள் தன்னைச் சூழ
நடுவண் அமைந்துள்ள பாண்டியன் அரண்மனை அத் தெய்வத் தாமரை
மலரின் அகத்தே அமைந்துள்ள அரிய பொகுட்டை ஒக்கும் என்றும்,
அந் நகரத்தே வாழும் தண்டமிழ்க் குடிமக்கள் அத்தாமரையகத்தே
எண்ணிறந்தனவாய்ச் செறிந்துதிகழும் நறுமணப் பூந்துகளை ஒப்பர்
என்றும், அந் நகரத்திற்குப் பிறநாட்டினின்றும் வரும் இசைவாணரும்
பிறருமாகிய பரிசிலர் அப்பூவின்கண் தாதூத வந்து மொய்க்கும்
தேன்வண்டுகளையே ஒப்பர் என்றும் கூறும் இவ் வுவமைகளைச்
சிந்தித்துப் பார்க்குமிடத்து எத்துணை இன்பந் தருகின்றன காண்மின்!
பிறர்க்கு ஈத்துவந்து வாழும் இயல்புடைய குடிமக்களையும்,
பரிசிலரையும், மலர்த்தாதுக்களாகவும் அத் தாதுக்களின் நறுமணத்தாலே
கவர்ந்திழுக்கப்பட்டுக் களிப்பால் இசைமுரன்று வந்து குழுமும்
தாதுண்பறவைகளாகவும் உவமித்த அழகினை எத்தனைமுறை
சிந்திப்பினும் தெவிட்டாது தித்திக்குமன்றோ? |