யழிவன ஆதலால், அவை எமக்குப் பொருளன்று.
அழிவில்லாத
பேரின்ப வீட்டை அளிக்கும் நினது திருவருளும், அதனை எம்பாற்
சேர்ப்பிக்கும் புரைபடா அன்பும், அவ் விரண்டானும் வரும்
இறைபணியறமும் ஆகிய இம் மூன்றுமே எமக்கு வேண்டும் என,
நுண்ணிதின் மூன்று பொருளை விட்டு மற்றொரு மூன்றினை இரக்கும்
இப் புலவருடைய மெய்யுணர்வு போற்றத் தக்கதாமன்றோ?
|
அன்பர்களே! இவ்வாறு இப் பரிபாடலின்கட்
பயின்றுவரும்
இன்சுவைப்பகுதிகள் பற்பல. அவற்றையும் அவற்றின்
நுண்பொருள்களையும் அங்கங்கே உரையானும் விளக்கத்தானும் நன்கு
விளக்கியிருத்தலான், அவற்றை ஆண்டுக் காண்க. ஈண்டுரைப்பின்
விரியும்.
|
இனி, இப் பரிபாடலின்கண் ஆண்டாண்டு உவமையாகவும்
சீரிய
நுணுக்கங்களாகவும் வருவன ஒருசில காட்டுதும்.
|
உவமை
|
நல்லிசைப்புலவர் தாம் கருதிய பொருளை ஓதுவார் உளத்தே நன்கு பதியும்படி
கூறுதற்குரியதொரு சிறந்த சாதனமாக உவமையைக் கையாள்கின்றனர். உவமை கூறுங்கால்
தாம் கருதிய பொருட்கும் அதற்கு உவமையாகத் தாம் எடுத்தோதும் பொருட்குமுள்ள
பொதுத்தன்மையை நன்கு சிந்தித்து, அப் பொதுத்தன்மையானே உவமையும் பொருளும்
பெரிதும் நெருக்கமுடையனவாதலுணர்ந்தே கூறுதல் பண்டைக் காலத் தமிழ்ப்புலவர்
வழக்கமாகும். அங்ஙனம் கூறப்படும் உவமை, ஓதுவார்க்குப் பெரிதும் இன்பந்தரும்
இயல்புடையதாம். இவ் வழக்கத்தைப் பிற்றைநாட்புலவர் பேணாது கண்மூடி வழக்கமாய்
உவமை கூறியிருக்கின்றனர்.
|
இனி, இப் பாடலின்கண் ஓதப்படும் உவமைகள் ஓதுவார்க்குக் கழிபேருவகை தருமியல்பின.
எடுத்துக்காட்டாகக் கீழே தரும் உவமைகளைக் காண்க.
|
மதுரைமாநகரத்தினையும், அந் நகரத்து வேந்தன் அரண்மனையையும், அவன் தண்குடைநீழலில்
இனிது வாழும் தமிழ்க்குடி மக்களையும், அங்கு வரும் பரிசிலரையும் உவமை கூறி
விளக்கப்புகுந்த ஒரு நல்லிசைப்புலவர் கூறும் உவமைநலந் திகழுமொரு பரிபாடலைக்
கேளுங்கள்,
|
|
"மாயோன் கொப்பூழ் மலர்ந்த தாமரைப்
பூவொடு புரையுஞ் சீறூர் பூவின் |