மகளே! யானும் என் கணவனும் ஆண்டு முதிராமல் எப்பொழுதும்
இன்றிருக்குமளவு இளமையுடையேமாகவே இருக்கும்படி செய்துவிடு"
என்பதாம். இவ்வாறு என்றென்றும் இளமையாக இருக்கும்படி அவ்
வையைதான் செய்துவிடுமேல் அந் நங்கையும் பொன்னாற் செய்த
"நத்தொடு நள்ளி (கண்டு) வயவாளை" முதலியவற்றை வையையில்
புதுநீர் வரும்பொழுதெல்லாம், தவறாமற் கொணர்ந்து வித்தி "விளைக
பொலிக" என வாயார நெஞ்சார வாழ்த்தி, மேலும் அப் புனலில்
"மாலையும் சாந்தும் மதமும் இழைகளும் கோலங்கொள" ஊட்டிப்
பின்னும் அஃது உண்ணா நறவினையும் ஊட்டுதல் திண்ணமே.
இங்ஙனம் உலகியலை இனிதிற் காட்டும் இப் புலவர் பெருமக்கள்,
தாமே இறைவனை இறைஞ்சி வேண்டுதலைச் சிறிது கேட்பாம். ஒரு புலவர்,

"பெருமானே! நின்னடி
தலையுற வணங்கினேம் பன்மாண் யாமும்
கலியில் நெஞ்சினேம் ஏத்தினேம் வாழ்த்தினேம்
கடும்பொடும் கடும்பொடும் பரவுதும்."

அஃதெற்றுக் கெனின்,

"கொடும்பாடு அறியற்க எம்மறிவு எனவே"

என்று அவ்விறைவனும் வியப்ப மெய்யுணர்வு ஒன்றனையே வேண்டாநின்றனர்.
இனி, மற்றொருவர் முருகப்பெருமானை இறைஞ்சி ஏத்தி,

      "பொறிவரிக் கொட்டையொடு புகழ்வரம் பிகந்தோய்
      நின்குணம் எதிர்கொண்டோர் அறங்கொண்டோர் அல்லதை
      மன்குணம் உடையோர் மாதவர் வணங்கியோர் அல்லதை
      செறுதீ நெஞ்சத்துச் சினம் நீடினோரும் 
      சேரா அறத்துச் சீரி லோரும்
      அழிதவப் படிவத்து அயரி யோரும்
      மறுபிறப்பு இல்லெனும் மடவோரும் சேரார்
      நின்னிழல்; அன்னோர் அல்லது இன்னோர்
      சேர்வர் ஆதலின் யாஅம் இரப்பவை
      பொருளும் பொன்னும் போகமும் அல்ல நின்பால்
      அருளும் அன்பும் அறனும் மூன்றும்
      உருளிணர்க் கடம்பின் ஒலிதா ரோயே."

நுகரப்படும் பொருளும், அவற்றை உளவாக்கும் பொன்னும் அவ் விரண்டானும்
நுகரும் நுகர்ச்சியும் கனவெனத் தோன்றி