நூலாசிரியரும் இசைவகுத்தோரும்

இப் பரிபாடலின்கண் இற்றைநாள் நமது கைக்கெட்டியுள்ள
பாடல்களில் முதற் பாடலையும் இறுதிப் பாடலாகிய 22 ஆம்
பாடலையும் இயற்றியவர் இன்னாரென அறிதற்கிடனில்லை. பழைய
உரைப்பகுதியிலிருந்து கிடைத்த பாடல்களும், பாடல் உறுப்புக்களும்,
இயற்றினோர் யார் எனவும் அறிதற்கு வழியில்லை. இனி, எஞ்சிய
பாடல்களை இயற்றினோராகப் பதின்மூன்று நல்லிசைப் புலவர்கள்
பெயர் காணப்படுகின்றன. அவை வருமாறு:

1. ஆசிரியர் நல்லந்துவனார்

இப் புலவர் பெருமான் செவ்வேட்குரிய 1 ஆம் பாடலும்
வையையின் மேலவாகிய 6, 11, 20 ஆகிய மூன்று பாடலும் ஆக
நான்கு பாடல்களை இயற்றியவராவார்.

கற்றாரேத்துங் கலித்தொகையினைத் தொகுத்து அந்நூற்கு
"ஆறறி அந்தணர்க்கு அருமறை பல பகர்ந்து," என்று தொடங்கும்
ஒப்பற்ற கடவுள் வாழ்த்தினை இயற்றியவரும், அக் கலித்தொகையில்
நெய்தற்கலி 33 பாடல்களையும் யாத்துத் தந்த வரும் இவரே. இதனை,

"நாடும் பொருள்சான்ற நல்லந் துவனாசான்
சூடுபிறைச் சொக்கன் துணைப்புலவோர் - தேடுவார்
கூட்டுணவே வாழ்த்தொடு கொங்காங் கலியினையே
கூட்டினான் ஞாலத்தோர்க் கு"

எனவும்,

"பெருங்கடுங்கோன் பாலை கபிலன் குறிஞ்சி
மருதனிள நாகன் மருதம் - அருஞ்சோழன்
நல்லுருத்தி ரன்முல்லை நல்லந் துவன்நெய்தல்
கல்விவலார் கண்ட கலி"

எனவும் வரும் வெண்பாக்களான் உணர்க.

இனி, இப் புலவர் பெருமான் அகநானூற்றின்கண் "கடல்
முகந்து கொண்ட" (43) என்று தொடங்கும் பாடலையும், நற்றிணையில்
"யாம்செய் தொல்வினைக்கு" (88) என்று தொடங்கும் பாடலையும்,
திருவள்ளுவமாலையில் "சாற்றிய பல்கலையும்" என்று தொடங்கும்
வெண்பாவினையும் இயற்றியவர் ஆவார்.