எனவே, இப் புலவர்பெருமான் தொகைநூல் எட்டனுள் வைத்து நான்கு
நூல்களிலே இடம்பெற்ற பெருஞ்சிறப்பினை யுடையராதலறிக.

இனி, இப் புலவர் பெருமான், இப்பரிபாடலின்கண் முருகவேளைப்
பாடிய (8) பாடலின்கண், திருப்பரங்குன்றின்கண் செவ்வேளைக் கண்டு
மகிழத் திருமால் முதலிய தேவரெல்லாம் வந்து கூடுதலாலே அப்
பரங்குன்றம் இமயக்குன்றம் நிகர்க்கும் என்றும், அப் பரங்குன்றில்
உள்ள சுனை இமயத்தின்கண் உள்ள சரவணம் என்னும் ஒருநிலைப்
பொய்கையினையே ஒக்கும் என்றும், இன்னும் பலவேறு வகையானும்
அப் பரங்குன்றினைப் பாடிய அருமையை அவரோடு ஒருகாலத்து
வாழ்ந்த புலவர் பெருமான் மதுரை மருதனிளநாகனார் பெரிதும்
பாராட்டிச் "சூர்மருங் கறுத்த சுடரிலை நெடுவேள் சீர்மிகு முருகன்
தண்பரங்குன்றத்து அந்துவன் பாடிய சந்துகெழு நெடுவரை இன்றீம்
பைஞ்சுனை" (அகநா - 59) எனப் புகழ்ந்துள்ளார்.

இவர் பெயர் முன்னர் 'ந' என்னும் சிறப்புடைச் சொல் புணர்த்து
வழங்கப்படுதலானும் இவர் சிறப்புணரலாம். இவர் இயற்பெயர்
அந்துவனார் என்பதாம். கல்வி கேள்விகளிற் சிறந்த பெரியோர்
பெயர்முன் அச் சிறப்பிற் கறிகுறியாக 'ந' என்னும் சிறப்புடைச் சொல்
புணர்த்து வழங்குதல் அக்காலத்து வழக்கமாகும். இச் சிறப்புடைச்
சொல் 'ந' என்னும் ஓரெழுத் தொருமொழியே என்பாரும், அற்றன்று
'நன்மை' என்னும் பண்புச் சொல்லே இயற் பெயரோடு சிறப்பாகப்
புணர்க்கப்படும். அப் பண்புச் சொல் இயற்பெயரின் முதலெழுத்து
உயிராகவாதல் மெல்லினமாகவாதல் இடையினமாகவாதல் இருப்பின்
'நல்' என நின்றும் அம் முதலெழுத்து வல்லின மாயவிடத்து லகர
வொற்றுங் கெட்டு ந என்று நின்றும் புணரும் என்பாருமாக இரு
திறத்து ஆசிரியர் உளர்; நல்லுருத்திரன், நல்லெழினியார்,
நல்லிறையனார், நன்னாகனார், நல்வழுதியார் எனவும்; நக்கீரனார்,
நச்செள்ளையார், நத்தத்தனார், நப்பண்ணனார் எனவும் வருதல் காண்க.

2. இளம் பெருவழுதியார்

இப் புலவர் பெருமான் திருமாலின் மேற்றாய் வரும் 15 ஆம்
பாடலியற்றியவராவார். பத்திச்சுவை சொட்டச் சொட்டக் கனிந்து திகழும்
அவ்வொரு பாடலே இவர் தம் பெருமைக்குப் போதிய சான்றாகும்.
இவரை இறையன்புடைமையானும் சால்புடைமையானும் ஆழ்வார்களில்
நம்மாழ்வாரையே ஒப்பர் என்பது மிகையன்று.