அந்தோ எந்தை

261
அந்தோ! எந்தை அடையாப் பேர் இல்!
வண்டு படு நறவின் தண்டா மண்டையொடு
வரையாப் பெருஞ் சோற்று முரி வாய் முற்றம்,
வெற்று யாற்று அம்பியின் எற்று? அற்று ஆகக்
5
கண்டனென், மன்ற; சோர்க, என் கண்ணே;
வையம் காவலர் வளம் கெழு திரு நகர்,
மையல் யானை அயாவுயிர்த்தன்ன
நெய் உலை சொரிந்த மை ஊன் ஓசை
புதுக்கண் மாக்கள் செதுக்கண் ஆரப்
10
பயந்தனை, மன்னால், முன்னே! இனியே
பல் ஆ தழீஇய கல்லா வல் வில்
உழைக் குரல் கூகை அழைப்ப ஆட்டி,
நாகு முலை அன்ன நறும் பூங் கரந்தை
விரகு அறியாளர் மரபின் சூட்ட,
15
நிரை இவண் தந்து, நடுகல் ஆகிய
வென் வேல் விடலை இன்மையின் புலம்பி,
கொய்ம் மழித் தலையொடு கைம்மையுறக் கலங்கிய
கழி கல மகடூஉப் போலப்
புல்லென்றனையால், பல் அணி இழந்தே.

திணையும் துறையும் அவை.
.....................ஆவூர் மூலங் கிழார் பாடியது.