அருளாய் ஆகலோ கொடிதே

144
அருளாய் ஆகலோ கொடிதே; இருள் வர,
சீறியாழ் செவ்வழி பண்ணி, யாழ நின்
கார் எதிர் கானம் பாடினேமாக,
நீல் நறு நெய்தலின் பொலிந்த உண்கண்
5
கலுழ்ந்து, வார் அரிப் பனி பூண் அகம் நனைப்ப,
இனைதல் ஆனாளாக, 'இளையோய்!
கிளையைமன், எம் கேள் வெய்யோற்கு?' என,
யாம் தன் தொழுதனம் வினவ, காந்தள்
முகை புரை விரலின் கண்ணீர் துடையா,
10
'யாம் அவன் கிளைஞரேம் அல்லேம்; கேள், இனி:
எம் போல் ஒருத்தி நலன் நயந்து, என்றும்,
வரூஉம்' என்ப 'வயங்கு புகழ்ப் பேகன்
ஒல்லென ஒலிக்கும் தேரொடு,
முல்லை வேலி, நல் ஊரானே.'

திணையும் துறையும் அவை.
அவனை அவள் காரணமாகப் பரணர் பாடியது.