இமிழ் கடல் வளைஇய

19
இமிழ் கடல் வளைஇய ஈண்டு அகன் கிடக்கை,
தமிழ் தலைமயங்கிய தலையாலங்கானத்து,
மன் உயிர்ப் பன்மையும், கூற்றத்து ஒருமையும்,
நின்னொடு தூக்கிய வென் வேல் செழிய!
5
'இரும் புலி வேட்டுவன் பொறி அறிந்து மாட்டிய
பெருங் கல் அடாரும் போன்ம்' என விரும்பி,
முயங்கினேன் அல்லனோ, யானே மயங்கிக்
குன்றத்து இறுத்த குரீஇ இனம் போல,
அம்பு சென்று இறுத்த அரும் புண் யானைத்
10
தூம்புடைத் தடக் கை வாயொடு துமிந்து,
நாஞ்சில் ஒப்ப, நிலம் மிசைப் புரள,
எறிந்து களம் படுத்த ஏந்து வாள் வலத்தர்
எந்தையொடு கிடந்தோர், எம் புன் தலைப் புதல்வர்;
'இன்ன விறலும் உளகொல், நமக்கு?' என,
15
மூதில் பெண்டிர் கசிந்து அழ, நாணி,
கூற்றுக் கண்ணோடிய வெருவரு பறந்தலை,
எழுவர் நல் வலம் கடந்தோய்! நின்
கழூஉ விளங்கு ஆரம் கவைஇய மார்பே?

திணை வாகை; துறை அரச வாகை.
அவனை அவர் பாடியது.