இன்று செலினும் தருமே

171
இன்று செலினும் தருமே; சிறு வரை
நின்று செலினும் தருமே; பின்னும்,
'முன்னே தந்தனென்' என்னாது, துன்னி
வைகலும் செலினும், பொய்யலன் ஆகி,
5
யாம் வேண்டியாங்கு எம் வறுங் கலம் நிறைப்போன்;
தான் வேண்டியாங்குத் தன் இறை உவப்ப
அருந் தொழில் முடியரோ, திருந்து வேல் கொற்றன்;
இனம் மலி கதச் சேக் களனொடு வேண்டினும்,
களம் மலி நெல்லின் குப்பை வேண்டினும்,
10
அருங் கலம் களிற்றொடு வேண்டினும், பெருந்தகை
பிறர்க்கும் அன்ன அறத் தகையன்னே.
அன்னன் ஆகலின், எந்தை உள் அடி
முள்ளும் நோவ உறாற்கதில்ல!
ஈவோர் அரிய இவ் உலகத்து,
15
வாழ்வோர் வாழ, அவன் தாள் வாழியவே!

திணை பாடாண் திணை; துறை இயன்மொழி.
அவனைக் காவிரிப்பூம் பட்டினத்துக் காரிக் கண்ணனார் பாடியது.