உடும்பு உரித்தன்ன

68
உடும்பு உரித்தன்ன என்பு எழு மருங்கின்
கடும்பின் கடும் பசி களையுநர்க் காணாது,
சில் செவித்து ஆகிய கேள்வி நொந்து நொந்து,
ஈங்கு எவன் செய்தியோ? பாண! 'பூண் சுமந்து,
5
அம் பகட்டு எழிலிய செம் பொறி ஆகத்து
மென்மையின் மகளிர்க்கு வணங்கி, வன்மையின்
ஆடவர்ப் பிணிக்கும் பீடு கெழு நெடுந் தகை,
புனிறு தீர் குழவிக்கு இலிற்று முலை போலச்
சுரந்த காவிரி மரம் கொல் மலி நீர்
10
மன்பதை புரக்கும் நல் நாட்டுப் பொருநன்,
உட்பகை ஒரு திறம் பட்டென, புட் பகைக்கு
ஏவான் ஆகலின், சாவேம் யாம்' என,
நீங்கா மறவர் வீங்கு தோள் புடைப்ப,
தணி பறை அறையும் அணி கொள் தேர் வழி,
15
கடுங் கள் பருகுநர் நடுங்கு கை உகுத்த
நறுஞ் சேறு ஆடிய வறுந் தலை யானை
நெடு நகர் வரைப்பில் படு முழா ஓர்க்கும்
உறந்தையோனே குருசில்;
பிறன் கடை மறப்ப, நல்குவன், செலினே.

திணை அது; துறை பாணாற்றுப்படை.
சோழன் நலங்கிள்ளியைக் கோவூர் கிழார் பாடியது.