எழு இனி நெஞ்சம்

207
எழு இனி, நெஞ்சம்! செல்கம்; யாரோ,
பருகு அன்ன வேட்கை இல்வழி,
அருகில் கண்டும் அறியார் போல,
அகம் நக வாரா முகன் அழி பரிசில்
5
தாள் இலாளர் வேளார் அல்லர்?
'வருக' என வேண்டும் வரிசையோர்க்கே
பெரிதே உலகம்; பேணுநர் பலரே;
மீளி முன்பின் ஆளி போல,
உள்ளம் உள் அவிந்து அடங்காது, வெள்ளென
10
நோவாதோன்வயின் திரங்கி,
வாயா வன் கனிக்கு உலமருவோரே.

திணையும் துறையும் அவை.
வெளிமான் துஞ்சிய பின், அவன் தம்பி இள வெளிமானை, 'பரிசில் கொடு' என, அவன் சிறிது கொடுப்பக் கொள்ளாது, பெருஞ்சித்திரனார் பாடியது.