எனைப் பல் யானையும்

63
எனைப் பல் யானையும் அம்பொடு துளங்கி,
விளைக்கும் வினை இன்றிப் படை ஒழிந்தனவே;
விறல் புகழ் மாண்ட புரவி எல்லாம்
மறத் தகை மைந்தரொடு ஆண்டுப் பட்டனவே;
5
தேர் தர வந்த சான்றோர் எல்லாம்,
தோல் கண் மறைப்ப, ஒருங்கு மாய்ந்தனரே;
விசித்து வினை மாண்ட மயிர்க் கண் முரசம்,
பொறுக்குநர் இன்மையின், இருந்து விளிந்தனவே;
சாந்து அமை மார்பில் நெடு வேல் பாய்ந்தென,
10
வேந்தரும் பொருது, களத்து ஒழிந்தனர்; இனியே,
என் ஆவதுகொல்தானே கழனி
ஆம்பல் வள்ளித் தொடிக் கை மகளிர்
பாசவல் முக்கி, தண் புனல் பாயும்,
யாணர் அறாஅ வைப்பின்
15
காமர் கிடக்கை அவர் அகன் தலை நாடே?

திணையும் துறையும் அவை.
அவரை அக் களத்தில் பரணர் பாடியது.