ஒரு தலைப் பதலை தூங்க

103
ஒரு தலைப் பதலை தூங்க, ஒரு தலைத்
தூம்பு அகச் சிறு முழாத் தூங்கத் தூக்கி,
'கவிழ்ந்த மண்டை மலர்க்குநர் யார்?' எனச்
சுரன்முதல் இருந்த சில் வளை விறலி!
5
செல்வைஆயின், சேணோன் அல்லன்;
முனை சுட எழுந்த மங்குல் மாப் புகை
மலை சூழ் மஞ்சின், மழ களிறு அணியும்
பகைப் புலத்தோனே, பல் வேல் அஞ்சி;
பொழுது இடைப்படாஅப் புலரா மண்டை
10
மெழுகு மெல் அடையின் கொழு நிணம் பெருப்ப,
அலத்தற் காலை ஆயினும்,
புரத்தல் வல்லன்; வாழ்க, அவன் தாளே!

திணை அது; துறை விறலியாற்றுப்படை.
அதியமான் நெடுமான் அஞ்சியை அவர் பாடியது.