வள் உகிர வயல் ஆமை

387
வள் உகிர வயல் ஆமை
வெள் அகடு கண்டன்ன,
வீங்கு விசிப் புதுப் போர்வைத்
தெண் கண் மாக் கிணை இயக்கி, 'என்றும்
5
மாறு கொண்டோர் மதில் இடறி,
நீறு ஆடிய நறுங் கவுள,
பூம் பொறிப் பணை எருத்தின,
வேறு வேறு பரந்து இயங்கி,
வேந்துடை மிளை அயல் பரக்கும்
10
ஏந்து கோட்டு இரும் பிணர்த் தடக் கை,
திருந்து தொழில் பல பகடு
பகைப் புல மன்னர் பணிதிறை தந்து, நின்
நகைப் புலவாணர் நல்குரவு அகற்றி,
மிகப் பொலியர், தன் சேவடி அத்தை!' என்று,
15
யான் இசைப்பின், நனி நன்று எனா,
பல பிற வாழ்த்த இருந்தோர் என்கோ?.........
மருவ இன் நகர் அகன்.................................
திருந்து கழல் சேவடி குறுகல் வேண்டி,
வென்று இரங்கும் விறல் முரசினோன்,
20
என் சிறுமையின், இழித்து நோக்கான்,
தன் பெருமையின் தகவு நோக்கி,
குன்று உறழ்ந்த களிறு என்கோ?
கொய் உளைய மா என்கோ?
மன்று நிறையும் நிரை என்கோ?
25
மனைக் களமரொடு களம் என்கோ?
ஆங்கு அவை, கனவு என மருள, வல்லே, நனவின்
நல்கியோனே, நசைசால் தோன்றல்,
ஊழி வாழி, பூழியர் பெரு மகன்!
பிணர் மருப்பு யானைச் செரு மிகு நோன் தாள்
30
செல்வக் கடுங்கோ வாழியாதன்
ஒன்னாத் தெவ்வர் உயர்குடை பணித்து, இவண்
விடுவர் மாதோ நெடிதே நி
புல் இலை வஞ்சிப் புற மதில் அலைக்கும்
கல்லென் பொருநை மணலினும், ஆங்கண்
35
பல் ஊர் சுற்றிய கழனி
எல்லாம் விளையும் நெல்லினும் பலவே.

திணையும் துறையும் அவை.
சேரமான் சிக்கற்பள்ளித் துஞ்சிய செல்வக்கடுங்கோ வாழியாதனைக் குண்டுகட் பாலியாதன் பாடியது.