வாயிலோயே! வாயிலோயே!

206
வாயிலோயே! வாயிலோயே!
வள்ளியோர் செவிமுதல் வயங்குமொழி வித்தி, தாம்
உள்ளியது முடிக்கும் உரனுடை உள்ளத்து
வரிசைக்கு வருந்தும் இப் பரிசில் வாழ்க்கைப்
5
பரிசிலர்க்கு அடையா வாயிலோயே!
கடுமான் தோன்றல் நெடுமான் அஞ்சி
தன் அறியலன்கொல்? என் அறியலன்கொல்?
அறிவும் புகழும் உடையோர் மாய்ந்தென,
வறுந் தலை உலகமும் அன்றே; அதனால்,
10
காவினெம் கலனே; சுருக்கினெம் கலப்பை;
மரம் கொல் தச்சன் கை வல் சிறாஅர்
மழுவுடைக் காட்டகத்து அற்றே
எத் திசைச் செலினும், அத் திசைச் சோறே.

திணையும் துறையும் அவை.
அதியமான் நெடுமான் அஞ்சி பரிசில் நீட்டித்தானை ஒளவையார் பாடியது.