வினை மாட்சிய

16
வினை மாட்சிய விரை புரவியொடு,
மழை உருவின தோல் பரப்பி,
முனை முருங்கத் தலைச் சென்று, அவர்
விளை வயல் கவர்பூட்டி,
5
மனை மரம் விறகு ஆகக்
கடி துறை நீர்க் களிறு படீஇ,
எல்லுப் பட இட்ட சுடு தீ விளக்கம்
செல் சுடர் ஞாயிற்றுச் செக்கரின் தோன்ற,
புலம் கெட இறுக்கும் வரம்பு இல் தானை,
10
துணை வேண்டாச் செரு வென்றி,
புலவு வாள், புலர் சாந்தின்,
முருகற் சீற்றத்து, உரு கெழு குருசில்!
மயங்கு வள்ளை, மலர் ஆம்பல்,
பனிப் பகன்றை, கனிப் பாகல்,
15
கரும்பு அல்லது காடு அறியாப்
பெருந் தண் பணை பாழ் ஆக,
ஏம நல் நாடு ஒள் எரி ஊட்டினை,
நாம நல் அமர் செய்ய,
ஓராங்கு மலைந்தன, பெரும! நின் களிறே.

திணை வஞ்சி; துறை மழபுலவஞ்சி.
சோழன் இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளியைப் பாண்டரங் கண்ணனார் பாடியது.