ஒல்லுவது ஒல்லும் என்றலும்

196
ஒல்லுவது ஒல்லும் என்றலும், யாவர்க்கும்
ஒல்லாது இல் என மறுத்தலும், இரண்டும்,
ஆள்வினை மருங்கின் கேண்மைப் பாலே;
ஒல்லாது ஒல்லும் என்றலும், ஒல்லுவது
5
இல் என மறுத்தலும், இரண்டும், வல்லே
இரப்போர் வாட்டல் அன்றியும், புரப்போர்
புகழ் குறைபடூஉம் வாயில்அத்தை;
அனைத்து ஆகியர், இனி; இதுவே எனைத்தும்
சேய்த்துக் காணாது கண்டனம்; அதனால்,
10
நோய் இலராக நின் புதல்வர்; யானும்,
வெயில் என முனியேன், பனி என மடியேன்,
கல் குயின்றன்ன என் நல்கூர் வளி மறை,
நாண் அலது இல்லாக் கற்பின் வாள் நுதல்
மெல் இயல் குறு மகள் உள்ளிச்
15
செல்வல் அத்தை; சிறக்க, நின் நாளே!

திணை பாடாண் திணை; துறை பரிசில் கடா நிலை.
பாண்டியன் இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நன்மாறன் பரிசில் நீட்டித்தானை ஆவூர் மூலங் கிழார் பாடியது.