வேந்து குறையுறவும் கொடாஅன்,

341
வேந்து குறையுறவும் கொடாஅன், ஏந்து கோட்டு
அம் பூந் தொடலை அணித் தழை அல்குல்,
செம் பொறிச் சிலம்பின் இளையோள் தந்தை,
எழு விட்டு அமைத்த திண் நிலைக் கதவின்
5
அரை மண் இஞ்சி நாட் கொடி நுடங்கும்
..........................................................................................................
புலிக் கணத்து அன்ன கடுங் கண் சுற்றமொடு,
மாற்றம் மாறான், மறலிய சினத்தன்,
'பூக் கோள்' என ஏஎய், கயம் புக்கனனே;
10
விளங்குஇழைப் பொலிந்த வேளா மெல் இயல்,
சுணங்கு அணி வன முலை, அவளொடு நாளை
மணம் புகு வைகல் ஆகுதல் ஒன்றோ
ஆர் அமர் உழக்கிய மறம் கிளர் முன்பின்,
நீள் இலை எஃகம் மறுத்த உடம்பொடு
15
வாரா உலகம் புகுதல் ஒன்று எனப்
படை தொட்டனனே, குருசில்; ஆயிடைக்
களிறு பொரக் கலங்கிய தண் கயம் போல,
பெருங் கவின் இழப்பது கொல்லோ,
மென் புனல் வைப்பின் இத் தண் பணை ஊரே!

திணையும் துறையும் அவை.
பரணர் பாடியது.