கடல்படை அடல் கொண்டி

382
கடல்படை அடல் கொண்டி,
மண்டுற்ற மலிர் நோன் தாள்,
தண் சோழ நாட்டுப் பொருநன்,
அலங்கு உளை அணி இவுளி
5
நலங்கிள்ளி நசைப் பொருநரேம்;
பிறர்ப் பாடிப் பெறல் வேண்டேம்;
அவற் பாடுதும், 'அவன் தாள் வாழிய!' என;
நெய் குய்ய ஊன் நவின்ற
பல் சோற்றான், இன் சுவைய
10
நல்குரவின் பசித் துன்பின் நின்
முன்னநாள் விட்ட மூது அறி சிறாஅரும்,
யானும், ஏழ் மணி, அம் கேழ், அணி உத்தி,
கண் கேள்வி, கவை நாவின்,
நிறன் உற்ற, அராஅப் போலும்
15
வறன் ஒரீஇ வழங்கு வாய்ப்ப,
விடுமதி அத்தை, கடு மான் தோன்றல்!
நினதே, முந்நீர் உடுத்த இவ் வியன் உலகு, அறிய;
எனதே, கிடைக் காழ் அன்ன தெண் கண் மாக் கிணை
கண் அகத்து யாத்த நுண் அரிச் சிறு கோல்
20
ஏறிதொறும் நுடங்கியாங்கு, நின் பகைஞர்
கேட்டொறும் நடுங்க, ஏத்துவென்,
வென்ற தேர், பிறர் வேத்தவையானே.

திணை அது; துறை கடைநிலை.
சோழன் நலங்கிள்ளியைக் கோவூர் கிழார் பாடியது.