கானல் மேய்ந்து வியன் புலத்து

374
கானல் மேய்ந்து வியன் புலத்து அல்கும்
புல்வாய் இரலை நெற்றி அன்ன,
பொலம் இலங்கு சென்னிய பாறு மயிர் அவியத்
தண் பனி உறைக்கும் புலரா ஞாங்கர்,
5
மன்றப் பலவின் மால் வரை பொருந்தி, என்
தெண் கண் மாக் கிணை தெளிர்ப்ப ஒற்றி,
இருங் கலை ஓர்ப்ப இசைஇ, காண்வர,
கருங் கோல் குறிஞ்சி அடுக்கம் பாட,
புலிப் பல் தாலிப் புன் தலைச் சிறாஅர்
10
மான் கண் மகளிர், கான் தேர் அகன்று உவா
சிலைப்பாற் பட்ட முளவுமான் கொழுங் குறை,
விடர் முகை அடுக்கத்துச் சினை முதிர் சாந்தம்,
புகர் முக வேழத்து மருப்பொடு, மூன்றும்,
இருங் கேழ் வயப் புலி வரி அதள் குவைஇ,
15
விருந்து இறை நல்கும் நாடன், எம் கோன்,
கழல் தொடி ஆஅய் அண்டிரன் போல,
வண்மையும் உடையையோ? ஞாயிறு!
கொன் விளங்குதியால் விசும்பினானே!

திணை பாடாண் திணை; துறை பூவை நிலை.
ஆய் அண்டிரனை உறையூர் ஏணிச்சேரி முடமோசியார் பாடியது.