கேட்டல் மாத்திரை அல்லது

216
'கேட்டல் மாத்திரை அல்லது, யாவதும்
காண்டல் இல்லாது யாண்டு பல கழிய,
வழு இன்று பழகிய கிழமையர் ஆயினும்,
அரிதே, தோன்றல்! அதற்பட ஒழுகல்' என்று,
5
ஐயம் கொள்ளன்மின், ஆர் அறிவாளீர்!
இகழ்விலன்; இனியன்; யாத்த நண்பினன்;
புகழ் கெட வரூஉம் பொய் வேண்டலனே;
தன் பெயர் கிளக்கும்காலை, 'என் பெயர்
பேதைச் சோழன்' என்னும், சிறந்த
10
காதற் கிழமையும் உடையன்; அதன்தலை,
இன்னது ஓர் காலை நில்லலன்;
இன்னே வருகுவன்; ஒழிக்க, அவற்கு இடமே!

திணையும் துறையும் அவை.
அவன் வடக்கிருந்தான், 'பிசிராந்தையார்க்கு இடன் ஒழிக்க!' என்றது.