தெண் கடல் வளாகம்

189
தெண் கடல் வளாகம் பொதுமை இன்றி
வெண் குடை நிழற்றிய ஒருமையோர்க்கும்,
நடு நாள் யாமத்தும் பகலும் துஞ்சான்
கடு மாப் பார்க்கும் கல்லா ஒருவற்கும்,
5
உண்பது நாழி; உடுப்பவை இரண்டே;
பிறவும் எல்லாம் ஓர் ஒக்குமே;
செல்வத்துப் பயனே ஈதல்;
துய்ப்பேம் எனினே, தப்புந பலவே.

திணையும் துறையும் அவை.
மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.