பயம் கெழு மா மழை

266
பயம் கெழு மா மழை பெய்யாது மாறி,
கயம் களி முளியும் கோடைஆயினும்,
புழல்கால் ஆம்பல் அகல் அடை நீழல்,
கதிர்க் கோட்டு நந்தின் சுரி முக ஏற்றை
5
நாகு இள வளையொடு பகல் மணம் புகூஉம்
நீர் திகழ் கழனி நாடு கெழு பெரு விறல்!
வான் தோய் நீள் குடை, வய மான் சென்னி!
சான்றோர் இருந்த அவையத்து உற்றோன்,
'ஆசு ஆகு' என்னும் பூசல் போல,
10
வல்லே களைமதிஅத்தை உள்ளிய
விருந்து கண்டு ஒளிக்கும் திருந்தா வாழ்க்கை,
பொறிப் புணர் உடம்பில் தோன்றி என்
அறிவு கெட நின்ற நல்கூர்மையே!

திணை பாடாண் திணை; துறை பரிசில் கடாநிலை.
சோழன் உருவப் பல் தேர் இளஞ் சேட்சென்னியைப் பெருங்குன்றூர் கிழார் பாடியது.