பருத்திப் பெண்டின் பனுவல்

125
பருத்திப் பெண்டின் பனுவல் அன்ன,
நெருப்புச் சினம் தணிந்த நிணம் தயங்கு கொழுங் குறை,
பரூஉக் கள் மண்டையொடு, ஊழ் மாறு பெயர
உண்கும், எந்தை! நிற் காண்கு வந்திசினே,
5
நள்ளாதார் மிடல் சாய்த்த
வல்லாள! நின் மகிழ் இருக்கையே.
உழுத நோன் பகடு அழி தின்றாங்கு
நல் அமிழ்து ஆக, நீ நயந்து உண்ணும் நறவே;
குன்றத்து அன்ன களிறு பெயர,
10
கடந்து அட்டு வென்றோனும், நிற் கூறும்மே;
'வெலீஇயோன் இவன்' என,
'கழல் அணிப் பொலிந்த சேவடி நிலம் கவர்பு
விரைந்து வந்து, சமம் தாங்கிய,
வல் வேல் மலையன் அல்லன் ஆயின்,
15
நல் அமர் கடத்தல் எளிதுமன், நமக்கு' எனத்
தோற்றோன்தானும், நிற் கூறும்மே,
'தொலைஇயோன் இவன்' என,
ஒரு நீ ஆயினை பெரும! பெரு மழைக்கு
இருக்கை சான்ற உயர் மலைத்
20
திருத் தகு சேஎய்! நிற் பெற்றிசினோர்க்கே.

திணை வாகை; துறை அரச வாகை.
சேரமான் மாந்தரஞ்சேரல் இரும்பொறையும் சோழன் இராச சூயம் வேட்ட பெருநற்கிள்ளியும் பொருதவழி, சோழற்குத் துப்பாகிய தேர்வண்மலையனை வடம வண்ணக்கன் பெருஞ்சாத்தனார் பாடியது.