பாடுநர்க்கு ஈத்த பல்

221
பாடுநர்க்கு ஈத்த பல் புகழன்னே;
ஆடுநர்க்கு ஈத்த பேர் அன்பினனே;
அறவோர் புகழ்ந்த ஆய் கோலன்னே;
திறவோர் புகழ்ந்த திண் அன்பினனே;
5
மகளிர் சாயல்; மைந்தர்க்கு மைந்து;
துகள் அறு கேள்வி உயர்ந்தோர் புக்கில்;
அனையன் என்னாது, அத் தக்கோனை,
நினையாக் கூற்றம் இன் உயிர் உய்த்தன்று;
பைதல் ஒக்கல் தழீஇ, அதனை
10
வைகம் வம்மோ வாய்மொழிப் புலவீர்!
'நனந் தலை உலகம் அரந்தை தூங்க,
கெடு இல் நல் இசை சூடி,
நடுகல் ஆயினன் புரவலன்' எனவே.

திணையும் துறையும் அவை.
அவன் நடுகல் கண்டு அவர் பாடியது.