பெருஞ் சோறு பயந்து

220
பெருஞ் சோறு பயந்து, பல் யாண்டு புரந்த
பெருங் களிறு இழந்த பைதல் பாகன்
அது சேர்ந்து அல்கிய அழுங்கல் ஆலை,
வெளில் பாழாகக் கண்டு கலுழ்ந்தாங்கு,
5
கலங்கினென் அல்லனோ, யானே பொலந் தார்த்
தேர் வண் கிள்ளி போகிய
பேர் இசை மூதூர் மன்றம் கண்டே?

திணையும் துறையும் அவை.
அவன் வடக்கிருந்தானுழைச் சென்று மீண்டு வந்து உறையூர் கண்ட பொத்தியார் அழுது பாடியது.