பொய்கை நாரை போர்வில்

209
பொய்கை நாரை போர்வில் சேக்கும்
நெய்தல் அம் கழனி, நெல் அரி தொழுவர்
கூம்பு விடு மெண் பிணி அவிழ்ந்த ஆம்பல்
அகல் அடை அரியல் மாந்தி, தெண் கடல்
5
படு திரை இன் சீர்ப் பாணி தூங்கும்
மென் புல வைப்பின் நல் நாட்டுப் பொருந!
பல் கனி நசைஇ, அல்கு விசும்பு உகந்து,
பெரு மலை விடரகம் சிலம்ப முன்னி,
பழனுடைப் பெரு மரம் தீர்ந்தென, கையற்று,
10
பெறாது பெயரும் புள்ளினம் போல, நின்
நசை தர வந்து, நின் இசை நுவல் பரிசிலென்
வறுவியேன் பெயர்கோ? வாள் மேம்படுந!
ஈயாய் ஆயினும், இரங்குவென்அல்லேன்;
நோய் இலை ஆகுமதி; பெரும! நம்முள்
15
குறு நணி காண்குவதாக நாளும்,
நறும் பல் ஒலிவரும் கதுப்பின், தே மொழி,
தெரிஇழை மகளிர் பாணி பார்க்கும்
பெரு வரை அன்ன மார்பின்,
செரு வெஞ் சேஎய்! நின் மகிழ் இருக்கையே!

திணை அது; துறை பரிசில் கடா நிலை.
மூவன் பரிசில் நீட்டித்தானைப் பெருந்தலைச் சாத்தனார் பாடியது.