மலை வான் கொள்க!' என

143
'மலை வான் கொள்க!' என, உயர் பலி தூஉய்,
'மாரி ஆன்று, மழை மேக்கு உயர்க!' எனக்
கடவுள் பேணிய குறவர் மாக்கள்,
பெயல் கண்மாறிய உவகையர், சாரல்
5
புனத் தினை அயிலும் நாட! சினப் போர்க்
கை வள் ஈகைக் கடு மான் பேக!
யார்கொல் அளியள்தானே நெருநல்,
சுரன் உழந்து வருந்திய ஒக்கல் பசித்தென,
குணில் பாய் முரசின் இரங்கும் அருவி
10
நளி இருஞ் சிலம்பின் சீறூர் ஆங்கண்,
வாயில் தோன்றி, வாழ்த்தி நின்று,
நின்னும் நின் மலையும் பாட, இன்னாது
இகுத்த கண்ணீர் நிறுத்தல் செல்லாள்,
முலையகம் நனைப்ப, விம்மி,
15
குழல் இனைவதுபோல் அழுதனள், பெரிதே?

திணை பெருந்திணை; துறை குறுங்கலி; தாபதநிலையும் ஆம்.
அவனால் துறக்கப்பட்ட கண்ணகி காரணமாக அவனைக் கபிலர் பாடியது.